Published : 14 May 2017 12:13 PM
Last Updated : 14 May 2017 12:13 PM

6 ஆண்டுகளில் சூரிய மின்சார கட்டணம் 80% சரிவு

கடந்த 6 ஆண்டுகளில் சூரிய ஆற்றல் (சோலார்) மின்சாரத்துக்கான கட்டணம் 80 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது யூனிட் ஒன்றுக்கு ரூ.2.44 ஆக குறைந்துள்ளது. உலக அளவில் சூரிய மின் உற்பத்தி அதிகரித்துவரும் நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இதற்கான கட்டணங்கள் மிக அதிக அளவில் குறைந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மெகாவாட் பகத்லா சோலார் பூங்கா ஏலத்தில், 200 மெகாவாட் மின்சாரத்தை ரூ.2.44க்கு அளிக்க ஏசிஎம்இ நிறுவனம் ஏலத்தை எடுத்துள்ளது. இந்த நிறுவனத்துடன் சேர்த்து எஸ்பிஜி கிளீன்டெக் நிறுவனமும் ஏலத்தை எடுத்துள்ளது. இது சாப்ட்பேங்க், பாக்ஸ்கான், பார்தி எண்டர்பிரைஸஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

இதுவரை இல்லாத வகையில் ஏசிஎம்இ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் மின்சாரத்தை அளிக்க உள்ளது. எஸ்பிஜி நிறுவனம் 300 மெகாவாட் மின்சாரத்துக்காக, ஏசிஎம்இ நிறுவனத்தை விட ஒரு பைசா அதிகமாக அளிக்க உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான், தைவான், தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற ஏலத்தை விட இந்த ஏலத்தில் நிறுவனங்கள் ஆர்வமாக பங்கு பெற்றன. இதன் மூலம் இந்தியா குறைந்த விலையில் மாற்று எரிசக்தியை வழங்கும் நாடாக உருவாகியுள்ளது. பகத்லா சோலார் பூங்கா ஏலத்தை இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நடத்தியது.

இதற்கு முன்பு 1 யூனிட் சோலார் மின்சாரத்துக்கு தென் ஆப்பிரிக்க நிறுவனம் ரூ.2.62 குறிப்பிட்டிருந்தது. எஸ்பிஜி கிளீன்டெக் நிறுவனம் அதானி மாற்று எரிசக்தி பூங்கா அருகில் 100 மெகாவாட் சூரிய மின்சரத்தை உற்பத்தி செய்வதற்கான ஏலத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த விலையில் சோலார் மின்சார உற்பத்திக்கான ஏலம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இலக்குகளை அடைவதன் மூலம் இந்தியாவில் பேட்டரி கார்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் வெற்றிபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x