

மும்பை: நாட்டின் வங்கிகளின் நிலைமை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையால் அதானி குழு நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த குழுமத்துக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி அளவில் கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம் ஆகும். எஸ்பிஐ ரூ.21,000 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளன. இந்தஸ்இந்த் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் அதானி குழுமத்துக்கு அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், நாட்டின் வங்கிகளின் நிலைமை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலீடு வளம், சொத்துக்களின் தரம், லிக்விடிட்டி, லாபம் எனப் பல்வேறு வரையறைகளிலும் இந்திய வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக இருக்கிறது. இந்திய வங்கித் துறை செயல்பாட்டினை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. தற்போதைய ஆய்வின்படி வங்கித் துறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை" என்று தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அதானி குழுமத்தின் பெயரோ அதன் சர்ச்சைகள் பற்றியோ வெளிப்படையாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
காங்கிரஸ் எதிர்ப்பு: அதானி குழுமத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்திருப்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தக் கோரி பிப்ரவரி 6-ம் தேதி நாடு முழுவதும் உள்ள எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கியின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அவருக்கும் கவுதம் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது என்றும், மோடி பிரதமராக பதவிக்கு வந்த பிறகு அதானி குழுமத்தின் வளர்ச்சி மிகப் பெரும் அளவில் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், “என்னுடைய தொழில் வெற்றி எந்தவொரு தலைவரின் உதவியால் நிகழ்ந்ததல்ல. பிரதமர் மோடியும் நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவருடன் என்னை தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள்” என்று அதானி கூறியுள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் இருப்பது என்ன? சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில்,“அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தது.