முட்டைக்கோஸ் கிலோ ரூ.1-க்கு விற்பனை: தாளவாடியில் அறுவடையைத் தவிர்க்கும் விவசாயிகள்
ஈரோடு: முட்டைக்கோஸ் விலை கிலோ ரூ.1-க்கு சரிந்துள்ளதால், தாளவாடி சுற்றுவட்டார விவசாயிகள் அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முட்டைக்கோஸ் பயிர் குறைந்த அளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதன் காரணமாக வரத்து குறைந்து, கிலோ ரூ.20 வரை விற்பனையானது. அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏராளமான விவசாயிகள் அதை பயிரிட்டனர். மூன்று மாத பயிரான முட்டைக்கோஸ், தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் விலை வெகுவாக சரிந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
முட்டைக்கோஸூக்கு அதிக விலை கிடைத்ததால், பெரும் பாலான விவசாயிகள் அதை பயிரிட்டோம். தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில், சந்தையில் அதன் விலை வெகுவாக சரிந்துள்ளது. கிலோ ரூ.1 முதல் ரூ.3 வரை மட்டுமே கொடுத்து வாங்க வியாபாரிகள் தயாராக உள்ளனர்.
ஒரு ஏக்கரில் முட்டைக்கோஸ் சாகுபடிசெய்ய ரூ.80 ஆயிரம்வரை செலவாகிறது. இந்நிலையில் குறைந்தபட்சம் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்றால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும். ஆனால், சந்தையில் விலை வெகுவாக குறைந்துள்ளதால், அறுவடை செய்யும் செலவுக்கு கூட விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் முட்டைக்கோஸ்களை அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். வெளிச் சந்தையில் முட்டைக்கோஸ் கிலோ ரூ.20 வரை தற்போது விற்பனையாகிறது.
எனவே, வேளாண்மைத்துறையினர் விவசாயிகளிடம் இருந்து முட்டைக்கோஸை, கட்டுப்படியாகும் விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும், என்றனர்.
