சீன பொம்மை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்திய தர நிர்ணயச் சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் வெளியிட்ட பொம்மைகளுக்கான தரக்கட்டுப்பாடுகள் தொடர்பான உத்தரவின் கீழ், ஜனவரி 1, 2023 முதல் பொம்மைகள் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.

தரக்கட்டுப்பாட்டு உத்தரவின்படி, ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ கூடாது.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உற்பத்தியாளர் சான்றிதழ் திட்டத்தின் கீழ் 29 உரிமங்கள் வெளிநாட்டு பொம்மை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 நிறுவனங்களுக்கு 2021-22-ஆம் நிதியாண்டிலும் 26 நிறுவனங்களுக்கு 2022 -23-ஆம் நிதியாண்டிலும் உரிமம் வழங்கப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த எந்த நிறுவனத்துக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. தரக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஜனவரி 25, 2023 வரை 39,000-க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in