

எத்தனை பேர் எவ்வளவுதான் கிண்டல் அடித்தாலும், கதர்த் துணி தருகிற ‘மரியாதை'யே தனி. இதனை, எத்தனை ஆயிரம் கொட்டி வாங்கினாலும் பிற ஆடைகள் தருவது இல்லை. விலை மலிவாய் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காமல், நேரடியாக நெசவாளி தொழிலாளர்களுக்குப் பயன் சென்று சேரும் விதத்தில் செயல்படும் கதர் வாரியமும் அதன் பொருட்களும், வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஓர் அற்புதம்.
‘ஒரு துணி வாங்கினால், ஒரு குடிசையில் விளக்கு ஏற்றுகிறீர்கள்' என்கிற வாசகத்துக்கு ஏற்ப உண்மை யாகச் செயல்படுகிறது கதர் நிறுவனம். அதற்குப் போட்டியாக சந்தையில் இறங்கி இருக்கிறது ஒரு தனியார் நிறுவனம்.
கதர்ப் பொருட்களின் விற் பனையை அதிகரிக்கும் நோக்கத் தில், சில நிபந்தனைகளுடன் ‘கதர்’ குறியீட்டுக்கு உரிய அனுமதி பெற்று, யாரும் கதர் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேப் இந்தியா, தன்னுடைய கடைகளில், ‘கதர்த் துணி' என்று அடையாளம் இட்டு, ஆடை ரகங்களை விற்கத் தொடங்கியது. ‘கதர்' என்று போட்டுக் கொள்ள, எதிர்ப்புத் தெரிவித்து கதர் வாரியம் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியது. ‘கதர்' அனுமதி கேட்டு ஃபேப் இந்தியா சமர்ப்பித்த கோரிக்கையையும் கதர் மற்றும் கிராமத் தொழில் கமிஷன் நிராகரித்தது.
தற்போது, ஃபேப் இந்தியா' வின் துணிகளுக்குப் பயன்படுத்தப் படும் ‘ஃப்ளேக்ஸ்' கச்சாப் பொரு ளும், நூற்பு முறையும் ‘கதர் ஆடை'க்கானது அல்ல என்று அரசாங்க ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஃபேப் இந்தியா நிறுவனம், கதர் ‘ஜீன்ஸ்', கதர் ‘டி-ஷர்ட்' என்றெல்லாம் அறிமுகப்படுத்தி, இளைஞர்களைத் தன்பக்கம் இழுப்பதில் முனைந்து, சந்தையில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.
`கதர்' என்கிற அடைமொழிக்கு உள்ள ‘மரியாதை' சந்தையில் நல்ல விலை போகும் என்பதை உணர்த்திய வகையில், ஃபேப் இந்தியா நம் நன்றிக்கு உரியது.
நிச்சயமாக ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. ஒரு தனியார் நிறுவனம் செய்ய முடிவதை, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கதர் கிராமத் தொழில் வாரியத்தால் செய்து காட்ட முடியாதா...?
முடியும்தான். ஆனால் லாப நோக்கத்துடன் இவ்வமைப்பு செயல்படுவதில்லை. இதுவே கதர் நிறுவனத்துக்கு மிகப் பெரும் தடையாக விளங்குகிறது.
இந்த நிலையில் 13/11/2015 அன்று இக்கமிஷனின் சந்தை இயக்ககம் வெளியிட்ட வழிகாட்டிக் குறிப்பில் அரசாங்க சப்ளைகளில் வணிக உபரி, 3%-ல் இருந்து 10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதா வது, உற்பத்திச் செலவைவிட, 10 சதவீதம் மட்டுமே கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உபரியை வைத்துக் கொண்டு தான், நிர்வாகச் செலவுகளையும் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், சந்தை விரிவாக்கத்துக்கு எங்கிருந்து நிதி வரும்? இதைத்தான் தனியார் நிறுவனம் தனக்கு சாதகம் ஆக்கிக் கொள்கிறது.
சுமார் 3.5 கோடி வேலை வாய்ப்புடன் உலகின் மொத்த நெசவு உற்பத்தித் திறனில் 61.6 சதவீத பங்களிப்புடன் இந்தியா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விசைத்தறி உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 4.92 சதவீதமாக உள்ளது. ஆனால், கைத்தறி உற்பத்தி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.35% சரிவை சந்தித்து வருகிறது. குறைவான முதலீட்டில் தம் ஊரிலேயே நிம்மதியான வாழ்க்கை என்பதோடு, ‘தானே தொழிலாளி, தானே முதலாளி' என்கிற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை முன் வைத்தது கதர்.
ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஒரு தனியார் நிறுவனம் கிராமப்புற கைவினைஞர்களைத் தனது ஊதியதாரர்களாக மாற்று கிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் தீய விளைவுகளில் ஒன்று -‘தொழிலாள முதலாளி’கள், ஊதியம் வாங்கும் முழுநேரத் தொழிலாளர்களாக மாறுவது.
மிகப் பெரிய ஒரு துறையில் தனியார் ஆதிக்கத்தை மேலோங்க விடுவது நாட்டின் நீண்ட கால நலனுக்கு எந்த விதத்திலும் நல்லது அல்ல.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் என் னென்ன ஆபத்துகள் விளையும்; அது ஏன் கூடாது என்பதற்கான ‘நேரடி' உதாரணமாக இதைக் கொள்ளலாம். ஒரு திரைப்படம் பார்க்கிற பணத்தில், சுற்றுச் சூழலுக்கு ஏதுவான (eco friendly), ஆண்டு முழுதும் ‘உழைக்கிற', கம்பீரமான ஆடை வாங்கிவிடலாம்.
இளைஞர்கள் இதனை மனதில் கொண்டு செயல்பட்டால்போதும். எந்த ஆபத்தும் நம்மை அண்டாது.