

புதுடெல்லி: பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், பற்பசை, சோப்பு உள்ளிட்டவை வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) என்ற பிரிவின் கீழ் வருகின்றன. இந்தியாவின் பொருளாதார செயல்பாட்டில் எஃப்எம்சிஜி துறை 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இத்துறையின் விற்பனை சரிந்துள்ளதாக தரவு ஆய்வு நிறுவனம் நீல்சன் ஐக்யூ தெரிவித்துள்ளது.
2022-23 நிதி ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாம்காலாண்டில் இத்துறையின் விற்பனை வளர்ச்சி - 0.3 சதவீதமாக சரிந்துள்ளது. அதேசமயம், விற்பனை மதிப்பு அடிப்படையில் இத்துறை 7.6 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பணவீக்கம் காரணமாக மக்களின் நுகர்வு குறைந்துள்ளதால், எஃப்எம்சிஜி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கிராமப்புறச் சந்தையில் நுகர்வோர் பொருட்கள் விற்பனை 2.8 சதவீதம் சரிந்துள்ளது. எனினும் நகர்ப்புறச் சந்தையில் 1.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
இதுகுறித்து நீல்சன் ஐக்யூ நிறுவனம் கூறுகையில், “பணவீக்கம் காரணமாக மக்களிடையே நுகர்வு குறைந்திருக்கிறது. குறிப்பாக, சிறிய பெட்டிக்கடைகள் மூலமான விற்பனை குறைந்துள்ளது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர்கள் பெரிய பாக்கெட் தயாரிப்புக்கு பதிலாக சிறிய பாக்கெட்டுகளில் கவனம் செலுத்தினால், மக்கள் நுகர்வு அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.