

மதுரை: சிறு தானியங்களுக்கு விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சுப்பிரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் உள்ளதுபோல் தமிழகத்திலும் வேளாண் துறை சார்பில் நடத்தப்படும் சந்தையில் மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்த நடைமுறை இல்லாததால் பல பகுதிகளிலும் இரவு நேரத்தில் வாகன சோதனை என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. மாதம் தோறும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்ள சரத்தை நீக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு மார்க்கெட்டிங் யார்டு அமைக்க வேண்டும்.
வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்க அரசுக்குத் தேவையான குடோன்கள் இல்லாததால் தனியார் கட்டும் குடோன்களுக்கு மானியங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அரசு நெல் நேரடி கொள்முதல் செய்வதுபோல் சிறு தானியங்களுக்கும் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.