மத்திய பட்ஜெட் 2023-24 | ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் கனவை இந்த பட்ஜெட் நிறைவேற்றும்: பிரதமர் மோடி கருத்து 

மத்திய பட்ஜெட் 2023-24 | ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் கனவை இந்த பட்ஜெட் நிறைவேற்றும்: பிரதமர் மோடி கருத்து 
Updated on
1 min read

‘‘ஏழைகள், கிராமத்தினர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை இந்த பட்ஜெட் நிறைவேற்றும்’’ என பட்ஜெட் தாக்கலுக்குப்பின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறினார்.

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சி காலத்தில், தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இது. இதில் புதிய வரிவிதிப்பு முறையில் தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பழங்குடியினருக்கு பாதுகாப்பான வீடு, சுகாதார வசதிகள், குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கான நிதியும் 66 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் தாக்கலுக்குப்பின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது: இந்த பட்ஜெட் ஏழைகள், கிராமத்தினர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும். வலுவான பொருளாதாரத்துக்கு இந்த பட்ஜெட் அடித்தளம் அமைக்கும். நடுத்தர பிரிவு மக்களுக்கு பெரிய அளவில் வரி நிவாரணம் வழங்குவதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் கடன் உத்தரவாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கு தேவையான பசுமை வளர்ச்சி, பசுமை பொருளாதாரம். பசுமை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை பணிகள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in