

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன், ‘‘பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினத்தவரின் மேம்பாட்டையும் உள்ளடக்கியதாக பட்ஜெட் இருக்கும்’’ என்று தெரிவித்தார். அவர் நேற்று அறிவித்த முக்கிய அம்சங்கள்.
1 கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிகரிக்க நிதி ஏற்படுத்தப்படும்.
2 சிறுதானியங்களை ஊக்குவிக்க ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.
3 படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்: இதில் குழந்தைகள், பெரியவர்கள் படிக்க சர்வதேச அளவில் புத்தகங்கள் இடம்பெறும். இதற்காக தேசிய புத்தக டிரஸ்ட், சிறுவர்கள் புத்தக டிரஸ்ட் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இத்திட்டம் என்ஜிஓ.க்களின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும்.
4 பிரபல கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ) 3 மையங்கள் அமைக்கப்படும்.
5 மருந்து துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
6 பழங்குடியின மாணவர்கள் பயிலும் 740 ஏகலைவா மாடல் உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் நியமிக்கப்படுவார்கள்.
7 குறிப்பிட்ட பழங்குடியின குழுக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த மேம்பாட்டு இயக்கம் அமல்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்.
8 மீன்வளத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிஎம் மட்சயா சம்படா யோஜ்னா திட்டத்தின் கீழ் துணை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். அதற்காக ரூ.6,000 கோடி ஒதுக்கப்படும்.
9 நாடு முழுவதும் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் தொடங்கப்படும்.
10 அனைத்து டிஜிட்டல் செயல்பாடுகளுக்கும் பான் எண் கட்டாயமாக்கப்படும்.
11 5ஜி தொழில்நுட்பத்தில் செயலிகள் உருவாக்க பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
12 பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்படும்.
13 கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்ஸ், நீர் நிலைகளில் சிறிய ரக விமானங்கள் இறங்கும் இடங்கள், அதிநவீன விமானங்கள் தரையிறங்கும் பகுதிகள் ஏற்படுத்தப்படும். ஸ்டீல், உரம், நிலக்கரி, உணவு தானியங்கள் போக்குவரத்துக்கு 100 கட்டமைப்புகள். இதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கப்படும்.
14 கோடிங், ஏஐ, ரோபோட்டிக், 3டி பிரின்டிங் உட்பட திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். ஒருங்கிணைந்த திறன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தபடும். இதில் 47 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
15 சுற்றுலாவை மேம்படுத்த புதிய செயலி அறிமுகம். 50 பகுதிகளில் ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டம்.
16 நிறுவனங்களில் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய செயல்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.
17 முதலீட்டாளர்கள் கோரப்படாத பங்குகளை திரும்ப பெறுவதற்கு வசதியாக ஒருங்கிணைந்த ஐ.டி. இணையதளம் அறிமுகம்.
18 மூத்த குடிமக்களின் சேமிப்பு உச்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
19 பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்: 2 ஆண்டு கால சேமிப்புக்கு 7.5 சதவீத வட்டி.