Published : 01 Feb 2023 07:46 PM
Last Updated : 01 Feb 2023 07:46 PM

மத்திய பட்ஜெட் 2023: புதிய தனிநபர் வருமான வரி முறையால் யாருக்கு பலன்?

புதுடெல்லி: நடுத்தர வர்க்க சம்பளதாரர்கள் பயன் பெறும் விதமாகக் கூறி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24–ல் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார்.

தள்ளுபடி, வரி அமைப்பில் மாற்றம், புதிய வரிவிதிப்பு நடைமுறையில் வரி விலக்கு நீட்டிப்பு, அதிக கூடுதல் வரிவிகிதத்தை குறைத்தல், அரசுத் துறை நிறுவனங்களை சாராதவர்கள் பெறும் விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரம்பு நீட்டிப்பு போன்றவை தொடர்பான அறிவிப்புகளை அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். இது குறித்த பட்ஜெட்டின் அம்சங்கள்:

புதிய வரி விதிப்பு நடைமுறையில் 7 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை வரிக் கட்ட தேவையில்லை. தற்போது, புதிய வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 5 ரூபாய் லட்சம் வரை வரி கட்ட தேவையில்லாத நிலை உள்ளது.

மேலும், இந்தப் புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் மிகப் பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது. 9 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர் 45,000 ரூபாய் வரி கட்டினால் போதும். இது அந்த தனிநபரின் வருமானத்தில் 5 சதவீதம் ஆகும். அந்த தனிநபர் இதுவரையில் அவருடைய வருமானத்தில் 60,000 ரூபாய் வரி செலுத்தி வருகிறார்.

அதேபோல், ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் பெறும் தனிநபர் 1.5 லட்சம் ரூபாய் வரியாக கட்டினால் போதும். அது அவருடைய வருமானத்தில் 10 சதவீதமே ஆகும். இதுவரையில் தனிநபர் வரியாக 1,87,500 ரூபாய் கட்டி வருகிறார். தற்போதைய வரிவிகிதத்தில் 20 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது, சம்பளம் பெறுபவர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப் பெரிய அளவிலான ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு வருமானம் 15.5 லட்சம் ரூபாய் அல்லது கூடுதல் சம்பளமாக பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரையில் நன்மை தரும்.

நான்காவது முக்கிய அறிவிப்பில், ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரி விகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது, முக்கிய அறிவிப்பின் கீழ் விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரிவிலக்கு வரம்பை நீட்டிப்பு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது, அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு பெற முடியும். இதுவரையில் 3 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புதிய வருமான வரி விதிப்பு முறை கவர்ச்சிகரமானதாகவும், சலுகைகள் நிறைந்ததாகவும் மாறி இருக்கிறது. எனவே, பழைய வருமான வரி முறையில் இருப்பவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி புதிய வருமான வரி முறைக்கு மாற முடியும். அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், புதிய வருமான வரி முறை சிறந்தது என கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, நாடு முழுவதும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இந்தப் புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தெரிகிறது. இந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D-ன் கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது. புதிய வருமான வரி முறையில் சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் (Annual Gross Salary) ஒட்டுமொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது.

இதனால், வரிவிகிதம் குறைவாக இருந்தும் கூட, கட்ட வேண்டிய வரி அதிகமாக இருப்பதால், புதிய வரிக் கொள்கையானது சம்பளதாரர்களுக்கு லாபகரமாக இல்லை என்ற கருத்து இருந்தது. இந்தச் சூழலில்தான், இந்தப் புதிய வருமான வரி முறையில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பானது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இனி இந்த முறைக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூறிப்பிடும்போது, “வருமான வரி விகிதங்களில் 2017-18ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலாவது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறவில்லை. மாறாக, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி விகிதங்களின்படியான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கடந்த 2020-21ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி விகிதங்களின்படியான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, மாத ஊதியப் பிரிவினரின் வரிச்சுமையை ஓரளவாவது குறைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், “அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி எல்லைக்குள் இருப்போர் வரி விலக்கு பெறும் உச்ச வரம்பு ஆண்டு வருமானம் ரு.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. பழைய வரி விதிப்பில் இருந்து புதிய வரி விதிப்பு முறைக்கு நெட்டித் தள்ளும் வஞ்சக வலை விரிக்கப்பட்டுள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. வரி விதிப்பு விவரம்:

  • ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5% வரி.
  • ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீதம் வரி.
  • ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவீதம் வரி
  • ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் வரி

எனவே, பழைய வருமான வரி முறையைப் பின்பற்றி வருபவர்களில் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர், வரி விலக்கு பெறுவதற்காக, புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற வாய்ப்புள்ளது.

வாசிக்க > வருமான வரிச் சலுகை முதல் நிதி ஒதுக்கீடுகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x