Published : 01 Feb 2023 11:39 AM
Last Updated : 01 Feb 2023 11:39 AM

மத்திய பட்ஜெட் | நிதிப் பற்றாக்குறை முதல் பணவீக்கம் வரை - சொல்லும் தெளிவும்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 112-ன் படி ஏப்.1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி நிறைவடையும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2024-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன்பாக நிதியமைச்சர் தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். அதனால், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தநிலையில் பட்ஜெட் குறித்த சில சொற்கள் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நிதிப் பற்றாக்குறை: ஒரு நிதியாண்டில் அரசாங்கத்தின் செலவுகள், அதன் கடன் அல்லாத வருமானத்தை விட அதிமாக இருக்கும்போது நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அரசாங்கத்திற்கு தேவையான மொத்தக் கடன் தொகையை குறிக்கிறது.

வருவாய் பற்றாக்குறை: வருவாய் பற்றாக்குறை என்பது, தினம்தோறும் ஒரு அரசாங்கம் மேற்கொள்ளும் செலவினங்களுக்கும், அரசாங்கத்தின் வரி மற்றும் பிற வகைகளில் வரும் வருமானங்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். இது அரசின் நிதிநிலைமையை அறிந்துகொள்வகற்கும், அரசாங்கத்தின் வருமானம் அதன் செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்த்தும் முக்கியமான அம்சம் வருவாய் பற்றாக்குறை.

வரி வருமானம்: வருமானங்கள், லாபங்கள் மற்றும் பொருள்கள், சேவைகளைப் பெறுவதில் இருந்து அரசாங்கம் வசூல் செய்யும் மொத்த வருவாய் வரி வருமானம் என்படும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகைப்படுகிறது. ஒரு அரசாங்கத்தின் வருமான ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது வரி வருமானமே.

நேரடி வரி: தனி நபர் மற்றும் வணிகங்களின் வருமானங்களின் மீது விதிக்கப்படும் வரி நேரடி வரி எனப்படும். இதில் வரி செலுத்துபவரும், வரி விதிக்கப்படும் நபரும் ஒருவரே. வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிக்கான உதாரணங்களாகும்.

மறைமுக வரி: ஒரு பொருளை அல்லது சேவையினைப் பெறுவதற்கு விதிக்கப்படும் வரி மறைமுக வரி எனப்படும். இதில், வரி செலுத்துபவரும் வரி விதிக்கப்படும் நபரும் வேறு வேறானவர்கள். ஜிஎஸ்டி, சுங்க வரி, மத்திய கலால் வரி போன்றவை மறைமுக வரிகளுக்கான உதாரணங்களாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி): Gross Domestic Product என்று சொல்லப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் (காலண்டு அல்லது முழு ஆண்டு) ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். ஒரு நாட்டின் எல்லைப்பகுதிக்குள் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இறுதி பொருள்கள் அல்லது சேவைகளை இது கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

பணவீக்கம்: பொருளாதாரத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை மொத்தமாக உயர்வு அடைவது பணவீக்கம் என்று அறியப்படுகிறது.

சுங்க வரி: மறைமுக வரிகளில் ஒன்றான சுங்க வரி நாட்டிற்கு உள்ளே அல்லது வெளியே செய்யப்படும் ஏற்றுமதி, இறக்குமதி மீது விதிக்கப்படுகிறது. இந்த வரியானது ஒரு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் இறுதி நுகர்வோர் மீது விதிக்கப்படுகிறது.

நிதிக்கொள்கை: அரசாங்கம் தனது பொருளாதார நோக்கங்களுக்காக அதன் வருவாய் (வரி வருவாய்) மற்றும் செலவீனங்களை நிர்வகிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளே நிதிக்கொள்கை என்பதாகும்.

ஒருங்கிணைந்த நிதி: இந்தியாவில் ஒருங்கிணைந்த நிதி என்பது, பேரிடர் மேலாண்மை போன்ற எதிர்பாராமல் ஏற்படும் விதிவிலக்கான செலவினங்களைத் தவிர்த்து, ஒரு நிதியாண்டில் அரசு மேற்கொள்ளும் வருமானங்கள் செலவுகளை உள்ளடக்கிய முக்கியமான கணக்கு ஆகும். விதிவிலக்குகள் இல்லாத அனைத்து செலவீனங்களும் இந்த நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x