

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்வடைந்து 59,924 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 126 புள்ளிகள் உயர்ந்து 17,788 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:29 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 406.14 புள்ளிகள் உயர்வடைந்து 59,956.04ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 103.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,765.65 ஆக இருந்தது
இன்று (பிப்.1) காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மோடி அரசாங்கத்தின் இரண்டாவது 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.
அதன்படி இந்தியப் பொருளாதாரம் எதிர்வரும் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி காணும். நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்து. இதனால் நேற்றைய வர்த்தம் நேர்மறையாக முடிவுற்றிருந்த நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி இருக்கின்றன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐசிஐசிஐ, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், கோாடக் மகேந்திரா, டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃபிசி, ஹெச்டிஎஃபிசி, பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. மாருதி சுசூகி, ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.