பொருளாதார ஆய்வறிக்கை 2023 | வேலையின்மை குறைந்தது

பொருளாதார ஆய்வறிக்கை 2023 | வேலையின்மை குறைந்தது
Updated on
2 min read

2018-19 நிதி ஆண்டில் வேலையின்மை 5.8 சதவீதமாக இருந்தநிலையில், அது 2020-21 நிதி ஆண்டில் 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு 2018-19-ல் 19.7 சதவீதமாக இருந்த நிலையில் அது 2020-21-ல் 27.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் கரோனா காலத்தில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் அவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் இஷ்ராம் தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 2022 டிசம்பர் வரையில் இத்தளத்தில் 28.5 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில்2021-22 நிதி ஆண்டில் 58.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2022ஏப்ரல்–நவம்பர் காலகட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 13.2 லட்சமாக உள்ளது. 2021-ல் இதே காலகட்டத்தில் அது 8.8 லட்சமாக இருந்தது.

இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 26.6 லட்சம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். தமிழ்நாட்டை அடுத்து குஜராத்தில் 20.7 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 20.4 லட்சம் பேரும் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது: ரஷ்யா–உக்ரைன் போர் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 7.8 சதவீதமாக உச்சம் தொட்டது. ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து வந்தது. ஆனால், தொடர்ந்து பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கை விட அதிகமாக நீடித்து வந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ரெப்போ விகித்தை உயர்த்தியது.

இந்நிலையில், 2022-23 நிதி ஆண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நுகர்வைப் பாதிக்கும் வகையில் இது உச்சமில்லை. முதலீட்டை பாதிக்கும் வகையில் மிகக் குறைவும் இல்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்ததால், பணவீக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது. பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. அதேபோல் அரிசிக்கு அதிக ஏற்றுமதி வரி விதித்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகச் சங்கிலி நெருக்கடியால் தொழில்துறை பாதிப்பு: நடப்பு நிதி ஆண்டில் தொழில்துறை வளர்ச்சி 4.1 சதவீதமாக உள்ளது. 2021-22 நிதி ஆண்டில் அது 10.3 சதவீதமாக இருந்தது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட நெருக்கடி, சீனாவின் ஊரடங்கு காரணமாக முக்கிய மூலப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக உலக அளவில் தொழிற்செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. அது இந்தியத் தொழில் துறையிலும் பிரதிபலித்தது.

அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரையில் 2021-22 நிதி ஆண்டில் 21.3 பில்லியன் டாலர் (ரூ.1.75 லட்சம் கோடி)அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இது 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம். கரோனா காலகட்டத்தில் இந்திய மருந்துத் துறை வளர்ச்சி அதிகரித்தது. 2022 செப்டம்பர் நிலவரப்படி மருந்துத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 20 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

வாகனத் துறையில் இந்தியா உலக அளவில் 3-வது பெரிய நாடாக உள்ளது. மொபைல் போன் தயாரிப்பில் 2-வது இடத்திலும் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது. தொழில்துறை வளர்ச்சியானது உலக அரங்கில் இந்தியாவை முக்கியமான நாடாக மாற்றும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in