

புது டெல்லி: எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி, குளிர்பான நிறுவனமான கோக கோலாவுடன் கைகோத்துள்ளது. இது குறித்த ஹிண்ட் ஒன்றையும் ரியல்மி இந்தியா வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ‘கொஞ்சம் காத்திருங்கள்’ என்றும் ரியல்மி தெரிவித்துள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம்கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது.
இந்நிலையில், பிரபல குளிர்பான நிறுவனமான கோக கோலா நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ரியல்மி அறிவித்துள்ளது. இது பப்ளியஸ்ட் கூட்டணி என்றும் ரியல்மி தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து ரியல்மி 10 புரோ ஸ்மார்ட்போனின் கோக் எடிஷனை வெளியிடும் என தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு இது ஊகமாக உள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரக போன்களை களமிறக்க கோக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் இந்து தமிழ் திசையில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து ரியல்மி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் ட்வீட் ஒன்றும் பகிர்ந்திருந்தார். ‘சியர்ஸ் ஃபார் ரியல்’ என அந்த ட்வீட்டில் அவர் சொல்லி இருந்தார். அதில் இடம்பெற்றிருந்த படத்தில் இருந்த போனின் ரிப்ளெக்ஷனில் கோக் குளிர்பானம் தெரிவது போல உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்த தகவலுக்கு ரியல்மி சொல்வது போல கொஞ்சம் காத்திருப்போம்.