

பெரம்பலூர்: தமிழகத்தில் முதல்முறையாக, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நவீன இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை செய்யும் செயல்விளக்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற நவீன கருவிகளுடன் கூடிய பருத்தி அறுவடை இயந்திரத்தின் செயல்பாட்டை எம்எல்ஏ ம.பிரபாகரன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை குறித்து விவசாயிகளுக்கு பருத்தி வயலில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, ‘தமிழகத்தில் பருத்தி விவசாயத்தின் எதிர்கால வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான பயிலரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வு குறித்து பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தது: பருத்தியை அறுவடை செய்ய ஆட்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிக அளவில் தேவைப்படுவதால் பருத்தி உற்பத்தி செய்யும் பரப்பு குறைந்து வருகிறது.
எனவே, பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நவீன இயந்திரத்தை கொண்டு பருத்தி அறுவடை செய்யும் இயந்திரம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்துகாண்பிக்கப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒரு ஏக்கர் பருத்தியை 45 நிமிடங்களில் அறுவடை செய்ய முடியும்.
மேலும், நேற்றைய நிகழ்வில் விவசாயிகளுக்கு பருத்தி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும், பருத்தியை விதைப்பது முதல் அறுவடை செய்யும் வரை பயன்படுத்தப்படும் இடுபொருட்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இயந்திரம் மூலம் பருத்தியை அறுவடை செய்வதற்கு ஏற்றார்போல பருத்தி பயிர் செய்யும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் மேலாண்மைத் துறை இயக்குநர் கலாராணி, பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் கருணாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.