

புதுடெல்லி: அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை முற்றிலும் போலியானது. அது நிறுவனத்தின் உரிமைப் பங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இழிவான தாக்குதல் என்று அதானி குழு தலைமை நிதி அலுவலர் ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது.
இந்நிலையில் தான் அதானி குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் ஜுகேஷிந்தர் சிங் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், "அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அளித்த அறிக்கை போலியானது. அதானி குழுமத்தின் அடிப்படை தொழில் முறைகளில் எந்த ஒரு தவறையும் அந்த நிறுவனத்தால் சுட்டிக் காட்ட இயலவில்லை. அவர்கள் எங்கள் தொழில்முறைகளை சரியாக அணுகாமல் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு 413 பக்கங்களில் நாங்கள் விளக்கமளித்துள்ளோம். உள்நோக்கத்துடன், போலி சந்தையை உருவாக்கவே அந்த அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டுள்ளது. அவர்கள் எழுப்பி 88 கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம். அந்தக் கேள்விகளில் இருந்தே அவர்கள் எங்கள் நிறுவனங்களைப் பற்றி எந்த ஆழமான ஆராய்ச்சியும் செய்யாமலேயே குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எங்கிருந்தோ ஏதோ தகவல்களை வெட்டி, ஒட்டி அறிக்கையாக வெளியிட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது எங்களின் எஃப்பிஓ எனப்படும் உரிமைப் பங்குகள் மீதான தாக்குதல். (ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பவர், மீண்டும் நிதி தேவைப்படும்போது அவர்கள்வசம் மீதமிருக்கும் பங்குகளில் தேவையானவற்றை விற்பனை செய்வார்கள். இது ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரிங் என்பார்கள். இதனை உரிமைப் பங்கு என்றும் கூறுவார்கள்) இந்த அறிக்கை மூலம் அவர்கள் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பியுள்ளனர். எங்களால் பொய்களை ஏற்க இயலாது" என்றார்.
அதானி என்டர்ப்ரைசஸின் எஃப்பிஓ இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரியது. இது ரூ.20 ஆயிரம் கோடியை உருவாக்கும் இலக்குடன் செயல்படுகிறது. இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனப் பங்குகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், “அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், அந்நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தது.