

பினாமி சொத்துகளை முடக்குவது தொடர்பாக பிரதமர் எடுக்க உள்ள நடவடிக்கை ரியல் எஸ்டேட் துறையை தூய்மைப்படுத்தும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிதாக கொண்டு வரப்பட உள்ள சட்டத்தை உரிய வகையில் அமல்படுத்தினால் ரியல் எஸ்டேட் விலை குறையும் என்று நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
மற்றொருவர் பெயரில் சொத்துகளை வாங்கிக்குவிப்பது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக உள்ளது. அத்துடன் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம் அதிகம் முடக்கப்படுவதும் இத்துறையில்தான். போலியான நபர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதற்கு இது வழி வகை செய்து வருகிறது.
ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் பினாமி பெயரிலான சொத்துகளின் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் உரிமையாளர்களின் பெயர்களைக் கண்டறிந்து அவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான சட்டங்கள் இல்லை. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு வருமானம் குறையும். இதனால் வரிப் பணம் மூலம் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் நலத் திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியாமல் போவதாக இத்துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது வரை அமல்படுத்தப்படவில்லை. பினாமி பெயரில் சொத்து வாங்குவதை தடுப்பதோடு கடுமையான அபராதம், சிறைத் தண்டனை விதிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது. பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்தின் சந்தை மதிப்பில் நான்கில் ஒரு பகுதியை அபராதமாக விதிக்க சட்டம் வகை செய்கிறது. தேவைப்பட்டால் அந்த சொத்தை முடக்கவும் சட்டம் வழி வகை செய்துள்ளது.
பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளைக் கண்டறிந்து அவற்றைக் கையகப்படுத்துவோம். அது தேசத்தின் சொத்து என்று பிரதமர் மோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சட்டம் இருக்கும் என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சொத்து தொடர்பான சட்டத்தின்படி நிலமோ அல்லது வீடோ அல்லது தங்கமோ மற்றும் பங்குச் சந்தை முதலீடோ, வங்கி சேமிப்போ எதுவாகயிருந்தாலும் அது சொத்தாகத்தான் கருதப்படும்.
புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள சட்டம் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும். இதனால் ஊழலும் குறையும். விலையும் கட்டுக்குள் வரும் என்று மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் துறை வழக்கறிஞர் வினோத் சம்பத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி உள்பட பெருநகரங்களில் குடிசைகளை அகற்றும் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இது பெருநகரங்களில் வீடுகளுக்கான தட்டுப்பாட்டை உணர்த்துகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். வளமான வாழ்க்கையை எதிர்நோக்கி கிராமங்களிலிருந்து மக்கள் ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் இடம் பெயர்கின்றனர்.
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி அளிக்கும் அரசின் திட்டத்தை எட்டவேண்டுமெனில் நகர் பகுதியில் 2 கோடி புதிய குடியிருப்புகளும் கிராமப் பகுதிகளில் 3 கோடி குடி யிருப்புகளும் கட்டியாக வேண்டும். ஆனால் இந்த இலக்கை எட்டு வதற்கான நடவடிக்கையில் அரசு மிகுந்த மெத்தனமாக செயல்படு வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பினாமி சொத்து தடுப்பு மசோதா மூலம் அரசின் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று ஜோன்ஸ் லாங் லா சலே இந்தியா நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி தெரிவித்துள்ளார்.
வீடு, மனை தொடர்பான பத்திரங்கள் தெளிவாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும் பட்சத்தில் கடன் வழங்க பல நிறுவ னங்கள் முன்வரும். இதனால் வீடு களை வாங்க பலரும் முன்வருவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.