

பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு துறையில் முக்கிய நிறுவனமான ஹட்சன் அக்ரோ, அடுத்த 12 மாதங்களில் 3,000 விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 1,000 விற்பனையகங்கள் என்கிற இலக்கை எட்டியுள்ளதாக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஹட்சன் டெய்லி விற்பனையகங்களை திறப்பதன் மூலம் நிறுவனம் தனது சில்லரை வர்த்தக வலைபின்னலை விரிவாக்கம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் 1,000 -வது விற்பனையகத்தை சென்னையில் திறந்துள்ளது. ஹட்சன் டெய்லி விற்பனையகம் பால் மற்றும் பால்பொருட்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை நிலையமாகும். வரும் ஆண்டில் நாடு முழுவதும் மேலும் 2,000 ஹட்சன் டெய்லி விற்பனையகங்களைத் திறக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விரிவாக்க பணிகளுக்கு இலக்கு வைத்துள்ளது. புணே, தெற்கு மஹாராஷ்டிரா, வடக்கு கேரளா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் சந்தை செயல்பாடுகளை விரிவாக்கவும், ஏற்கெனவே முக்கிய சந்தை யாக உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் மற்றும் தெலங்கானா பகுதி களில் சந்தையை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
1000-வது ஹட்சன் டெய்லி விற்பனையகத்தை தொடங்கி வைத்து பேசிய நிறுவனத்தின் சந்தை மற்றும் விற்பனைத்துறை யின் உதவி துணைத்தலைவர் பிரசன்னா வெங்கடேஷ், எங்களது தயாரிப்புகளுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சில்லரை விற்பனையக விரிவாக்கம் இருக்கிறது. புதிய சந்தைகளுக்கு ஏற்ப புதுமையான தயாரிப்புகளை இணைப்பதற்கான ஆராய்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
ஹட்சன் டெய்லி விற்பனையகங்கள் மூலம் ஆரோக்கியா பால், ஹட்சன் (தயிர், பன்னீர், நெய், வெண்ணெய், ஆடைநீக்கப்பட்ட பால்பவுடர், டெய்ரி ஒயிட்னர்) அருண் ஐஸ்கிரீம் மற்றும் உடனடி உணவு வகையான ஓயலோ பிராண்ட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.