இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக இருக்கும் - ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக இருக்கும் - ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-ம் ஆண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வட்டி விகித உயர்வு முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம், சர்வதேச ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவு உருவாகும். வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும்.

உலகளவில் ஏற்படும் பொருளாதார சுணக்க நிலையை கருத்தில்கொண்டு வரும் 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2022-ல் மதிப்பிடப்பட்ட6.4 சதவீத வளர்ச்சியை காட்டிலும்0.6 சதவீதம் குறைவாகும். 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி மிதமான வேகத்திலேயே இருக்கும்.

இருப்பினும், 2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் 6 சதவீதமாக இருக்கும் என்ற முந்தைய மதிப்பீட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

பல்வேறு கடினமான சூழல்களால், அடுத்த ஆண்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தில் 0.4 சதவீத பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவ்வாண்டில் உலக பொருளாதாரம் 1.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும்.

கடந்தாண்டில் 7.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2023-ல் 5.5 சதவீதமாக குறையும். சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை குறைவு,ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது இறக்குமதிக்கான பணவீக்கத்தை குறைக்க உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in