Published : 26 Jan 2023 04:03 AM
Last Updated : 26 Jan 2023 04:03 AM

பெங்களூருவுக்கு இணையாக வளரும் ஓசூர் தொழில் நகரம்

பெங்களூருவுக்கு இணையாக வளர்ந்து வரும் தொழில் நகரான ஓசூரில் மாநகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் குண்டூசி முதல் விமான உதிரிப்பாகங்கள் வரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 2 ஆயிரம் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் தயாரிக்க கூடிய பிரபல நிறுவனங்கள், கைகடிகாரம் தயாரிக்கும் நிறுவனம், மிக்சி, மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.

இதேபோல, மலர்கள், காய்கறி விற்பனை தளமாகவும் திகழ்கிறது. நாளுக்கு, நாள் ஓசூர் நகரம் பெங்களூருவுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இதனால், ஓசூர் மாநகராட்சியின் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஓசூர் மாநகருடன் சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் மட்டுமல்லாமல் உலக அளவிலும் வர்த்தகம் செய்யக்கூடிய முக்கிய நகரமாக ஓசூர் திகழ்ந்து வருகிறது. தற்போது, தமிழக அரசு ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேபோல, ஓசூரில் புதிய நூலகங்கள், நிழற்கூடங்கள் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில், மாநகராட்சிக்கு சொந்தமான 33 பள்ளிகள் மற்றும் 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாநகராட்சி மூலம் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில், நீர்த்தேக்க தொட்டி, கழிப்பறை, கூடுதல் வகுப்பறை, பழுது பார்த்தல், உணவு கூடம் என பல்வேறு பணிகளுக்கு ரூ.5.90 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x