

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 563 புள்ளிகள் (0.9 சதவீதம்) உயர்வடைந்து 60,656 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 158 புள்ளிகள் (0.8 சதவீதம்) உயர்வடைந்து 18,053 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை பெரிய மாற்றமின்றி தொடங்கிய போதிலும் விரைவில் ஏற்றத்தை நோக்கிச் சென்றன.காலை 09.38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 280.69 புள்ளிகள் உயர்வடைந்து 60,373.66 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.20 புள்ளிகள் சரிந்து 17,923.05 ஆக இருந்தது.
உலக அளவில் குழப்பமான சூழல் நிலவிய போதிலும், மொத்த விற்பனையின் பணவீக்கம் டிசம்பரில் 4.9 சதவீதமாக குறைந்தது, கச்சா மற்றும் விமான எரிபொருள் மீதுதான வரி குறைப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று லாபத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 562.75 புள்ளிகள் உயர்வடைந்து 60,655.72 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 158.45 புள்ளிகள் உயர்வடைந்து 18,053.30 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், பங்குகள் உயர்ந்திருந்தன. டாடா ஸ்டீல், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.