

டாடா அறக்கட்டளையில் இருந்து இப்போதைக்கு வெளியேறும் திட்டம் இல்லை என ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார்.
டாடா அறக்கட்டளையில் இருந்து ரத்தன் டாடா விரைவில் வெளியேறுவதாகவும், புதிய தலைவரை நியமிப்பதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருப் பதாகவும், இந்த நடைமுறை அடுத்த ஆண்டு மத்தியில் முடி வடையும் என டாடா அறக்கட் டளை உறுப்பினரான ஆர்.கே.கிருஷ்ண குமார் செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் இதனை மறுத்து டாடா சன்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
டாடா அறக்கட்டளை தேசிய அளவில் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்பட ரத்தன் டாடா விரும்புகிறார். அதே சமயம் சரியான நேரத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டாடா சன்ஸ் தெரிவித்திருக்கிறது.
டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனம் டாடா சன்ஸ். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா அறக்கட்டளை 66 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா இருக்கிறார். 66 சதவீத பங்குகள் இருப்பதன் காரணமாக டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரியை எளிதாக வெளியேற்ற முடிந்தது.