

பெங்களூரு: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஷேர் சாட் தனது ஊழியர்களில் 500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. ஷேர் சேட் நிறுவனம் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது. அதில் 2200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
அந்த நிறுவனம் தனது ஊழியர்களில் 500 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘ஷேர் சாட், மோஜ் ஷார்ட் வீடியோ ஆப் நிறுவனங்களில் 500 பேரை நீக்கவுள்ளோம். எங்கள் நிறுவன வரலாற்றில் இது மிகவும் கடுமையான மற்றும் வேதனையளிக்கும் முடிவு. எங்கள் ஊழியர்கள் அனைவருமே மிகவும் திறமைசாலிகள். அவர்களில் 20 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்.
எங்கள் முதலீட்டு சிக்கலால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 2022-ல் மொஹல்லா டெக் நிறுவனம் கேமிங் ப்ளாட்ஃபார்மான Jeet11-ஐ மூடியது. இதில் வேலை பார்த்துவந்த 100 பேர் பணியிழப்பை சந்தித்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக காஸ்ட் கட்டிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட முதலீட்டு சிக்கலால் தற்போது ஷேர் சாட், மோஜ் வீடியோவிலிருந்து 500 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்க சலுகைகள் என்னென்ன? - ஊழியர்கள் ஆட்குறைப்பை அறிவித்துள்ள ஷேர் சேட் நிறுவனம் நோட்டீஸ் பீரியட் முழுவதும் முழுச் சம்பளம் தரப்படும். ஊழியர்கள் வேலை செய்த ஆண்டுகளை கணக்கு செய்து ஒவ்வொரு வருடத்திற்கும் 2 வார சம்பளம் வழங்கப்படும். ஜூன் 2023 வரை ஊழியர்களுக்காகன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஊழியர்கள் அவர்கள் பயன்படுத்திய அலுவலக லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்ஸை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஊழியர்கள் ஸ்டாக் ஆப்ஷன் ப்ளானை விருப்பப்பட்டால் ஏப்ரல் 30 2023 வரை வைத்துக் கொள்ளலாம். மேலும், பயன்படுத்தாத விடுமுறை நாட்களுக்கான சம்பளத்தை 45 நாட்கள் வரை கொடுக்க வாக்குறுதி அளித்துள்ளது.
முன்னதாக, அமேசான் நிறுவனம், உலகம் முழுவதும் தனது அலுவலகங்களில் 18 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. ட்விட்டர், மெட்டா, அமேசான் லே ஆஃப்களை தொடர்ந்து தற்போது ஷேர் சேட் நிறுவனமும் ஆட் குறைப்பை அறிவித்துள்ளது.