Published : 14 Jan 2023 09:14 AM
Last Updated : 14 Jan 2023 09:14 AM

கைத்தறிக்கு உயிர் கொடுக்க வேண்டிய தருணம் இது!

கைத்தறி துறை

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழில் நெசவு. நெசவுத் தொழிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. நமது நாட்டில் கிராமங்கள், சிறு நகரங்களில் வசிக்கும் 35 லட்சம் நெசவாளர்களில், 25 லட்சம் பேர் – பெண்கள்! நெசவுத் தொழிலை வலுப்படுத்தினால், கிராமப்புற வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், சமூக மேம்பாடு,தற்சார்பு இந்தியா…. என பல நோக்கங்கள் தாமாக நிறைவேறும்.

சைதாப்பேட்டை, குன்றத்தூர் உள்ளிட்ட சென்னை மாநகரை ஒட்டிய பகுதிகளிலேயே சுமார் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. பெரிய முதலீடு தேவையில்லை; உற்பத்திப் பணியில் துளியும் ஆபத்து இல்லை; சுற்றுச்சூழலுக்கு சற்றும் பாதிப்பு இல்லை. ஆனால் ஆதாயங்கள் மட்டும் நிரம்ப உண்டு. சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல், பண்பாட்டுப் பாரம்பரிய அடையாளங்கள் அழியாது காத்தல், நம்முடைய பருவநிலைக்கு ஏற்ற தனித்துவமான வடிவமைப்புகள், சாமானியரின் ‘கையைக் கடிக்காத’ மிகக் குறைந்த விலையில் தரமான பொருள்…. நெசவுக்கு எதுவும் ஈடில்லை காண்பீர்! 1970-களில் விசைத்தறிகள் பெருகத் தொடங்கின.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்கு உள்ளானது. ஓர்அங்குலம் துணி நெய்ய 80 முறை தறிசெய்ய வேண்டும். ஒரு நெசவாளரால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 4 மீட்டர் துணி நெய்ய முடியும்; விசைத்தறியால் 400 மீட்டர் ‘உற்பத்தி’ செய்ய முடிந்தது.

இதன் விளைவாய், தென்காசி துண்டு, மதுரை ஜக்கார் துண்டுஉள்ளிட்ட நமது துணி அடையாளங்கள் மெல்ல மறையத் தொடங்கின.அரசின் அலட்சியம், பொதுமக்களின்அக்கறையின்மை காரணமாகக் கைத்தறி நெசவு, கவனிப்பாரின்றிப் போனது. நல்லவேளையாகத் தற்போதுசில ஆண்டுகளாக மீண்டும், கைத்தறித்துணிகளின் பக்கம் உலக அளவில் பொதுமக்களின் பார்வை திரும்பி இருக்கிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்ட 2016-17 ஆண்டறிக்கையின் படி, உலகக் கைத்தறித் துணிகளில் 95% நம்முடையது! 2017-18 ஆண்டில் நம்முடைய கைத்தறி ஏற்றுமதி 354 மில்லியன் டாலர் (ரூ.2,900 கோடி). இன்னும்உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் கைத்தறித்துணி ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்க இயலும். இதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, அரசுக்கும் நமக்கும் இருக்கிறது. நெசவாளர்களுக்கு உதவ, தேசிய கைத்தறி வளர்ச்சி அமைப்பு சிறப்பாகச் செயல்படுகிறது. தொழிலின் நிலையான நீடித்தவளர்ச்சிக்கு உதவுதல், ஆங்காங்கே நெசவாளர் குழுக்கள் அமைய வழிகோலுதல், மூலப்பொருள் கொள்முதல் செய்ய நிதியுதவி செய்தல், வடிவமைப்பு உள்ளிட்ட தயாரிப்புப் பணிகளில் ‘மாண்பு கெடாமல்’ தொழில்நுட்பத்தை சாத்தியம் ஆக்குதல், கண்காட்சிகள் மூலம் சந்தை ஆதரவு திரட்டுதல், சலுகைக் கடன், மானியங்கள் கிடைக்க வழி செய்தல், நெசவாளர்களுக்கு வணிக மேலாண்மை தொடர்பான பயிற்சி தருதல், காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தனிநபர் திறனை அங்கீகரித்தல், விருதுகள் வழங்கல் உள்ளிட்ட பணிகளை இவ்வமைப்பு முன்னெடுக்கிறது.

நெசவாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடிவரை, 3 ஆண்டுகளுக்கான தொழில் முதலீடு, சாதனங்கள் வாங்க அங்கீகரிக்கப்பட்ட நெசவாளருக்கு ரூ.2 லட்சம் வரை முத்ரா கடன், குழுவுக்கான பொதுப் பணிக்கூரை அமைக்க ரூ.10லட்சம் வரை நிதியுதவி; வட்டி மானியம் 3% என்று பல வகைகளில் உதவிகள் நல்கப்படுகின்றன என்கிறது இவ்வமைப்பின் 2021-22 ஆண்டறிக்கை. ஆனாலும் சில பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. கைத்தறிப் பொருட்களுக்குத் தற்போது 5% ஜிஎஸ்டிவரி விதிக்கப்படுகிறது. (விசைத்தறிப் பொருட்களுக்கு – 12%) கைத்தறிப் பொருட்கள் மீது வரி விதிப்பது நியாயமற்றது; அது அறவே நீக்கப்பட வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகத் தெலங்கானாவில் அம்மாநில முதல்வர்உட்பட பலரும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். மத்திய அரசு இதைப்பரிசீலிக்க வேண்டும். நெசவுத் தொழிலுக்கு ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்குதல், ஆடை உற்பத்தித் துறையில் முதலீட்டுக்கு முன்னுரிமை, சர்வதேச சந்தையில், வலிமையான பிரச்சாரம் மூலம் நமது துணிகளுக்கு வலுவான ஆதரவு திரட்டுதல், நெசவாளர் நல நிதியம் அமைத்து நெசவாளரின் தேவைகளை நிறைவேற்ற முயற்சித்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தினால் நல்லது. பொதுவாக நெசவாளர்கள் மிகவும் மென்மையானவர்கள். அதனாலேயே நெசவாளர் குரல் உரக்கக் கேட்பதில்லை. அதற்காக அரசும் நாமும் செவி கொடுக்காமல் விட்டுவிடுவது தர்மமா?

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x