

புதுடெல்லி: பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனம், வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து தருதல், நிறுவனங்களுக்கான சட்ட ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வந்தது.
இந்நிறுவனத்தின் உதவியுடன் உலகளாவிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பெரும் வருவாய் ஈட்டும் நபர்கள், உள்நாட்டில் தங்கள் சொத்து விவரங்களை மறைத்து வரி ஏய்ப்பு செய்து வந்தனர். இந்நிலையில், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைப் பற்றிய ஆவணங்களை 2016-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இந்த ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்று உலகளவில் மிகப் பெரும் அதிர்வலையைப் ஏற்படுத்தின. இந்தியாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் வினோத் அதானி உட்பட 500 பிரபலங்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றன. இவர்கள் ரூ.20,000 கோடி அளவில் கணக்கில் வராத சொத்து களைக் கொண்டிருப்பது இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
இந்த வழக்கு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பனாமா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெனைனா ஜவானி கூறும்போது, “பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக தேவையான தகவலை இந்தியாவுடன் பகிர பனாமா அரசு தயாராக உள்ளது. பனாமா நிதி கட்டமைப்பில் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டிருக்கிறது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது” என்றார்.
பனாமா பேப்பர் கசிந்ததை யடுத்து, பணமோசடியை கணக்காணிக்கும் அமைப்பான எஃப்ஏடி எஃப் பனாமா நாட்டை தீவிரக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த் தது. இதற்கு வருத்தம் தெரிவித்த ஜெனைனா.
“தற்போது பனாமாவில் சட்டவிரோத அமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன’’ என்று தெரிவித்தார்.