

பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து லிங்க்டு இன் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு ஒன்று வைரலாகி உள்ளது. கடந்த ஆண்டு ட்விட்டர் தொடங்கிவைத்த லே ஆஃப் எனப்படும் ஆட்குறைப்பு கரோனா தொற்றைவிட வேகமாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பரவிவருகிறது என்று சொல்லும் அளவுக்கு மெட்டா, அமேசான், கோல்ட்மேன் சேக்ஸ் எனப் பல நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் அண்மைச் செய்தியாக அமேசானின் ஆட்குறைப்பு செய்தி இன்று இணைந்துள்ளது.
அதேபோல், அமெரிக்க முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் (goldman sachs) ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வாரத்தில் மட்டும் சுமார் 3200 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐஐடி காரக்பூரில் பட்டம் பெற்று 6 மாதங்களுக்கு முன்னர் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற சர்வதேச புகழ் பெற்ற நிறுவனத்தில் அமெரிக்காவில் மென்பொருள் மேம்பாட்டாளராக இணைந்தா சுபம் சாஹு. தற்போது அவரும் இதில் சிக்கியுள்ளார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் சுபம் தனது 23-வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்தக் கொண்டாட்டம் முடிந்த அடுத்த நாளில் அவருக்கு நிறுவனம் அனுப்பிய இ-மெயிலில் அவர் பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சுபம் சாஹூ உடைந்துபோய்விடவில்லை. தனது லிங்க்டு இன் சமூக வலைதள பக்கத்தில், ‘புத்தாண்டை தொடங்குவதற்கு சிறந்த வழி. அதுதான் எனது முதல் பணி. மென்பொருள் மேம்பாட்டில் எனது முதல் அனுபவம். கோல்டுமேன் சாக்ஸில் எனது பணிக்காலம் குறைவுதான். ஆனாலும் நான் அந்நிறுவனத்திற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். அங்கே இருந்த உகந்த சூழலால் என்னால் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. எனக்கும் என்னைப் போல் வேலையிழந்தவர்களுக்கும் நல் அதிர்ஷ்டம் வாய்க்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
சுபம் சாஹுவின் இந்த நேர்மறையான சிந்தனையைப் பாராட்டி இணையவாசிகள் பின்னூட்டங்களைப் பதிவிட்டு வருகின்றனர். நிறைய நிறுவனங்கள் அவருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.