சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
Updated on
1 min read

ஈரோடு: அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது, என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி, அஞ்சலகத்தில் ரூ.500-ல் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம், அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் கார்டு, காசோலைப் புத்தகம், இணைய வங்கிச் சேவை, பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் என் இஎஃப்டி சேவை உள்ளிட்ட வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மேலும், நேரடி மானியத் திட்டத்தின் மூலம், அரசின் அனைத்து வகை மானியங்கள், அடல் பென்ஷன் திட்டம் போன்றவற்றின் பலன்களை இந்த சேமிப்புக் கணக்கில் பெற முடியும். இத்துடன், கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டியானது 7.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், முதலீ டானது 120 மாதங்களில் இரட்டிப்பாகும்.

மூத்த குடிமக்களின் வட்டி விகிதமானது 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து, பெண்களின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்கான சேமிப்புகளை உறுதி செய்யலாம்.

ஆண் குழந்தைகள் உட்பட அனைவருக்குமான (பொன்மகன்) பொது வருங்கால வைப்பு கணக்குகளை தொடங்கி நெடுங்கால சேமிப்பை செயல்படுத்தலாம். ரூ.100 முதல் மாதா மாதம் சேமிக்க ஆர்டி கணக்குகளை தொடங்கவும், அஞ்சலகத்தின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரி விலக்கும் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in