

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 மாநாடு பிப்ரவரி 13 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தூதரக அதிகாரிகளின் கூட்டத்தில் நேற்று பேசியதாவது: மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டம் உலகத்துக்கானது. இந்தியா பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வலுவான சூழலை உருவாக்கியுள்ளது. இது, ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த மனிதவளத்தினால் சாத்தியமாகியுள்ளது.
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டு மடங்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாட பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.