

பணமற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், வர்த்தக நிறுவனங்கள் அதை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை அறிந்து கொள்ள சமையலறை சாதனங்கள் மற்றும் கிரைண்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான செளபாக்கியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரதராஜனை சந்தித்தோம்.
‘‘இந்த பண்டிகைக் கால விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என விற்பனை களைகட்டும் நேரத்தில் வர்த்தகம் பாதியாக குறைந்துள்ளது. மிக இக்கட்டான நிலைமையை சந்திக்கிறோம். ஆனாலும், பிரசவ வலி போல இதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளோம். பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மத்திய அரசு பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முயற்சிக்கிறது. அந்த முயற்சிக்காக நாங்களும் எங்கள் விற்பனையை கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறோம் என்றுதான் சமாதானம் அடைந்து கொள்கிறோம்’’ என்றார். அரசின் முயற்சி பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் பணமற்ற பொருளாதாரத்தை நோக்கிய அரசின் முயற்சிக்கு முன்பாகவே நாங்கள் அந்த முறைக்கு மாறிவிட்டோம். அதனால் விற்பனை பாதிப்பைத் தவிர வேறு வகைகளில் எங்களது பணிகள் முடங்கவில்லை.
எங்களுக்கு மூலப் பொருட்கள் சப்ளை செய்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். தமிழ்நாடு தவிர, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கல், பிளாஸ்டிக் பொருட்கள் முதல் போல்ட், நட் வரை வருகின்றன. நேரடியாக சிறு தொழில் முனைவோர்களிடமிருந்து வாங்குவது தவிர, மொத்தமாக ஒரே நிறுவனத்திலிருந்தும் கொள்முதல் நடக்கிறது. இவர்கள் எல்லோருக்குமே காசோலை வழியாகவும், நெட்பேங்கிங் வழியாகவும்தான் பணத்தைச் செலுத்துகிறோம். பணமாக செலுத்துவதற்கு வாய்ப்பே இல்லை.
தவிர எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய 9 டிஸ்டிபியூட்டர்கள், 200 டீலர்கள் உள்ளனர். இவர்களிடமிருந்து எங்களுக்கு வந்து சேரும் தொகைகளும் காசோலை வழியாகத்தான் வருகிறது. இவர்களிடமிருந்தும் ரொக்க பரிவர்த்தனை கிடையாது. நாங்கள் சென்னையில் கால் பதித்த ஆரம்ப காலத்திலிருந்தே டீலர்களிடமிருந்து காசோலைதான் வாங்குகிறோம். இதனால் டீலர்களுடனான உறவு இப்போதும் சுமூகமாக நடக்கிறது.
மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் எங்களிடம் ஒரு கிரைண்டர் வாங்கிக் கொண்டு, அதற்குரிய தொகைக்கு காசோலை கொடுத்திருந்தார். அவரது கையெழுத்திட்ட காசோலை என்பதால் அதை மாற்றாமல் பத்திரப்படுத்தியிருந்தோம். நாங்கள் அவரது கணக்கிலிருந்து பணம் எடுக்கவில்லை என்பதால், அந்த கிரைண்டரை அவர் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தார். பிறகு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து போன் செய்து அந்த காசோலையை வங்கியில் செலுத்த சொல்லி ஜனாதிபதி கூறியதாக குறிப்பிட்டனர். அதன் பிறகு அந்த காசோலையை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு வங்கியில் செலுத்தினோம். எங்களது காசோலை பரிவர்த்தனையில் இது ஒரு உதாரணம்.
தயாரிப்புகளை விற்பனை செய்யும் இடங்களுக்கு அனுப்பும் வாகனங்களுக்கான கட்டணத்தை அளிப்பதும் வங்கி மூலமாகத்தான். வாகன நிறுவனங்களுடன் ஆண்டு ஒப்பந்தம் என்பதால் ரொக்க விநியோகம் கிடையாது.
தவிர பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்களுக்கு தேவையாக சமையல் சாதனங்களை மொத்தமாக அளித்தாலும் எங்களது வங்கி கணக்கு மூலமாகத்தான் பரிவர்த்தனை நடக்கிறது.
பணியாளர்களுக்கு சம்பளத்துக்காக ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் வங்கிக் கணக்கு வைத்துள்ளோம். ஒரு புதிய பணியாளரை வேலைக்கு எடுக்கிறோம் என்றால் அவர் வேலையில் சேரும்போதே வங்கிக் கணக்கு தொடங்கிவிடுகிறோம். ஒருவர் பத்து நாட்களில் வேலையிலிருந்து விலகினாலும் அவரது வங்கிக் கணக்கு மூலம்தான் ஊதியத்தை அளிக்கிறோம். ஆரம்பத்தில் ரொக்கமாக கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது. ஒவ்வொருவருக்கும் சம்பளத்தை கணக்கு பார்த்து, அதற்கான சில்லரை தொகை வரை எண்ணி, கவரில் வைத்து குறிப்பிட்ட ஊழியருக்கு சரியாக கொடுக்க வேண்டும். அதில் இரண்டு பேர் சம்பள தேதியில் வரவில்லை என்றால் கவரைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இப்படியான வேலைகளை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டோம். மாதம் பொறந்தா குறிப்பிட்ட தேதியில் சம்பளம், அது சரியாக கணக்கிற்கு சென்றுவிடும், அதை எப்போது வேண்டுமானாலும் ஊழியர் எடுத்துக் கொள்ளலாம் என்கிறபோது நமக்கும் வேலை மிச்சம். இதனால் சம்பள பணத்தை அப்படியே செலவு செய்துவிடாமல், ஏதாவது மிச்சம் பிடிக்க முடிகிறது என்று அவர்கள் குறிப்பிடுவதை கேட்கிறபோது சந்தோசமாகத்தான் இருக்கும். இப்படியாக எங்களது எல்லா பரிவர்த்தனைகளுக்கும் முறையான கணக்குகள், வங்கி நடவடிக்கைகள் என எப்போதோ மாறிக் கொண்டோம்.
ஆனால் விற்பனையை பொறுத்த மட்டில் நவம்பர் 8ம் தேதிவரை 70 சதவீத வர்த்தகம் ரொக்கமாகத்தான் நடந்தது. 30 சதவீதம் மட்டுமே கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடந்தது. ஆனால் இப்போது மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் விற்பனை வழக்கத்தை விட பாதியாக குறைந்துள்ளது. ஆனாலும் இப்போதைய விற்பனையில் 70 சதவீதம் கிரெடிட், டெபிட் கார்டு மூலமாக நடக்கிறது என்பது பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ஒரு சாதகமான விசயமாக பார்க்கிறேன்.
இதனால் எங்களுக்கு நேரடியாக இழப்புகள் இருந்தாலும் ஒரு ஆரோக்கியமாக சமூகம் பிறப்பதற்கு முன்பாக பிரசவ கால வேதனையை அனுபவிக்கும் தாயைப்போல இந்த நெருக்கடிகளை கடந்துபோக முயற்சி செய்கிறோம் என்றார்.
maheswaran.p@thehindutamil.co.in