

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் இரண்டாவது வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 847 புள்ளிகள் (1.41 சதவீதம்) உயர்வடைந்து 60,747 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 241 புள்ளிகள் (1.35 சதவீதம்) உயர்வடைந்து 18,101 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்தடனேயே தொடங்கியது. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 722.04 புள்ளிகள் உயர்ந்து 60,622.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 190.90 புள்ளிகள் உயர்ந்து 18,050.35 ஆக இருந்தது. முந்தைய வாரத்தின் தொடர் சரிவுகளில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றமுடனேயே இன்றை வர்த்தகத்தைத் தொடர்ந்தன. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 989 புள்ளிகள் (1.65 சதவீதம்) வரை உயர்வில் சென்றது.
அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு போன்ற உலக அளவில் நிலவிய சாதகமான சூழல் காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தங்களின் வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன. இதனால் கடந்த வாரத்தில் தொடர்ந்த மூன்று நாள் கடும் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 846.94 புள்ளிகள் உயர்வடைந்து 60,747.31 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 241.75 புள்ளிகள் உயர்வடைந்து 18,101.20 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்ந்திருந்தன. டைட்டன் கம்பெனி பங்கு வீழ்ச்சி கண்டிருந்ததது.