

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டால் அங்கீகரிக்கப்படாத இந்திய கோவிட் மருந்துகள் கள்ளச் சந்தையில் அதிக அளவில் விற்பனையாவதாக செய்தி வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சிக்ஸ்த் டோன் என்ற சீன ஊடகம் தெரிவித்திருப்பதாவது: சீனாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஜீரோ கரோனா கொள்கை(கரோனா இல்லா நிலையை உருவாக்குவதற்கான கொள்கை) கடந்த டிசம்பர் 7ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவின் தேசிய சுகாதர ஆணையத்தின் மதிப்பீட்டின்படி கடந்த டிசம்பர் 20ம் தேதி வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடி.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிதமான பாதிப்புகளே ஏற்படுகின்றன என்றாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வயதானவர்கள் மத்தியில் இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. மிக அதிக எண்ணிக்கையில் தொற்று பரவுவது குறித்து சீன அரசுக்கு அந்நாட்டு ஆய்வகங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
சீனாவில் பாக்ஸ்லோவிட் என்ற மருந்து கரோனா தடுப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த மருந்து சீன கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு - ஒரு பெட்டி மருந்தின் விலை ரூ.6 லட்சம் - விற்கப்படுகிறது. இதன் காரணமாக குறைந்த விலையில் கிடைக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை நோக்கி மக்களின் கவனம் திரும்பி உள்ளது.
குறிப்பாக, கரோனாவுக்கான இந்திய தடுப்பு மருந்துகளான ப்ரிமோவிர், பாக்ஸிஸ்டா, மோல்னான்ட், மோல்நட்ரிஸ் ஆகியவற்றை சீனாவின் இ வணிக நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளதால் அவற்றை சீன மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். அவசர பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த இந்த 4 மருந்துகளுக்கும் இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. எனினும், இந்த மருந்துகளுக்கு சீன அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அந்த வகையில் இந்த மருந்துகள் அந்ந நாட்டிற்கு 'போலி' மருந்துகள். எனினும், இவை அதிக அளவில் அங்கு விற்பனையாகி வருகின்றன.
பாக்ஸ்லோவிட் மருந்துக்கு மாற்று மருந்துகளாக ப்ரிமோவிர் மற்றும் பாக்ஸிஸ்டா ஆகியவையும், மோல்னுபிரவிர் மருந்துக்கு மாற்று மருந்துகளாக மோல்னான்ட், மோல்நட்ரிஸ் ஆகியவை உள்ளன. ப்ரிமோவிர் மாத்திரைகளில் கரோனாவை தடுக்கக்கூடிய முக்கிய மூலக்கூறான நிர்மத்ரெல்விர் இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த மத்திரைகளை எடுத்துக்கொள்வதால் கரோனா தொற்று கட்டுப்படுவதில்லை. இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதால் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், இதனால் பலனில்லை. அந்த வகையில் இது கரோனா பரவலுக்கு வழிவகுப்பதாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.