

பங்கு பரிவர்த்தனைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை ‘செபி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடி உரையாற்றினார். அப்போது பங்குச்சந்தையில் லாபம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பது யோசிக்க வேண்டிய தருணம் இது என உரையாற்றினார். இதற்கு பதில் அளித்த ஜேட்லி நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என நேற்று கூறினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக புதுடெல்லி யில் நடந்த டிஜிதன் மேளா நிகழ்ச்சியில் ஜேட்லி மேலும் கூறியதாவது: பிரதமர் மோடியின் உரை தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவரின் உரை சில ஊடகங்களில் தவறாக புரிந்துகொண்டு அந்த உரைக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கும் திட்டம் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்தத் தகவல் முற்றிலும் தவறு.
பிரதமர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அப்படி கூறவில்லை. அந்த எண்ணம் அரசுக்கும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கி அமைப்புக்கு பணம் வந்திருக்கிறது. யாருடைய பணம் என்பதில் இருக்கும் ரகசியத்தன்மை விலகி இருக்கிறது. இதன்மூலம் வங்கி அமைப்பு பலம் அடையும். இந்தத் தொகையை சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். கள்ளப்பணம் முதல் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் பணம் உள்ளிட்ட அனைத்துக்கும் காரணம் அதிக அளவில் பணம் புரளுவதுதான்.
ரொக்கமில்லா பரிவர்த்தனை என்பது பணம் இல்லாத நட வடிக்கை என எடுத்துக்கொள்ள தேவையில்லை. குறைவான பணப்புழக்கம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மொபைல் போன் இல்லாதவர்கள் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை களை மேற்கொள்ளலாம். இவ்வாறு ஜேட்லி கூறினார்.