மோடி அரசின் பொருளாதார கொள்கைக்கு சர்வதேச நிதியத்தின் இயக்குநர் பாராட்டு

பிரதமர் மோடி மற்றும் அன்டோனிட் சாயே
பிரதமர் மோடி மற்றும் அன்டோனிட் சாயே
Updated on
1 min read

வாஷிங்டன்: உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியில் பிரதமர் மோடி அரசின் இந்திய பொருளாதார கொள்கைகளுக்கு சர்வதேச நிதியம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் அன்டோனிட் சாயே கூறியதாவது. சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரத்துக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமான நிலையில் உள்ளன. மற்ற நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமானது.

2022 ஏப்ரல் மற்றும் செப்டம்பருக்கு இடையில் இந்தியா 9.7 சதவீத பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது, சீனாவின் 2.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு அதிகம். 2023 மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நடப்பு 2022-23 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2022ல் 3.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021-ல் கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் போது காணப்பட்ட வேகத்தில் இது பாதியாக இருக்கும்.

மேலும், 2023-ல் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.2 சதவீதமாக குறையும். இது போருக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் குறைவாகும்.

உக்ரைன்-ரஷ்யப் போர் உள்ளிட்ட பாதகமான புவிசார் அரசியல் பதற்றங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமான வகையிலேயே உள்ளன. இதனால், 2022-23-ல் 6.7 சதவீதமாக இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு 2023-24ல் 5.7 சதவீதமாக குறைந்தாலும், அடுத்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி வேகம் 6.9 சதவீதமாக அதிகரிக்கும். இது உலக சராசரியை விட அதிகம்.

இந்தியாவுக்குச் சாதகமான மற்றொரு முக்கிய அம்சமாக பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. மோடி அரசு பணவீக்கத்தில் எடுத்த வேகமான நடவடிக்கைகள் காரணமாக அது விரைவாகவும், கணிசமான அளவிலும் கட்டுக்குள் வர உதவியது. முக்கியமான முன்னேறிய பொருளாதாரங்களைக் கொண்ட உலகின் பெரும் பாலான நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திணறி வருகின்றன. ஒரு சில நாடுகளில் பணவீக்கமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும்கூட அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மோடி அரசின் கொள்கை முடிவுகள் பணவீக்கத்தை விரைவாக கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி வேகத்தை துரிதமாக்க உதவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in