எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.10 லாபம், டீசலுக்கு ரூ.6.50 நஷ்டம்

எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.10 லாபம், டீசலுக்கு ரூ.6.50 நஷ்டம்

Published on

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளபோதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனை விலையை குறைக்காமல் முந்தைய நிலையிலேயே தொடர்கின்றன. அந்த வகையில் தற்போது அந்நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலை ரூ.10 லாபத்திலும் டீசலை ரூ.6.5 நஷ்டத்திலும் விற்பனை செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் பீப்பாய் கச்சா எண்ணெய் 102.97 டாலராக இருந்தது. அது ஜூன் மாதத்தில் 116 டாலராக உயர்ந்தது. எனினும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் சில்லறை விற்பனை விலையை உயர்த்தவில்லை. இதன் காரணமாக அந்நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.17, டீசலுக்கு ரூ.27.7 என்ற அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இதனால், அந்நிறுவனங்களின் வருவாய் கடுமையாகக் குறைந்தது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ரூ.21,201 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்தன.

ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 78.09 டாலராக குறைந்துள்ளது. எனினும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விற்பனை விலையைக் குறைக்காமல் அப்படியே தொடர்கின்றன. முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக விற்பனை விலை குறைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது இந்நிறுவனங் கள் பெட்ரோலை ரூ.10 லாபத்தில் விற்றுவருகின்றன. அதேபோல், கடந்த ஜூன் மாதம் அந்நிறுவனங்கள் டீசலை லிட்டருக்கு ரூ.27.7 நஷ்டத்தில் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது அது ரூ.6.5 ஆக குறைந்துள்ளது. கடந்த 15 மாதங்களாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதன் விற்பனை விலையில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in