

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு வாகன விற்பனை 15 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் மொத்தமாக 2.11 கோடி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும் ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டில் 1.83 கோடி வாகனங்கள் விற்பனையாகின. இந்நிலையில் 2022-ல் விற்பனை 2.11 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டில் 1.53 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 2021 ஆண்டைவிட 13.37 சதவீதம் அதிகம். 2021-ல்1.35 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின.
அதேபோல், 2021-ல் பயணிகள் வாகன விற்பனை 29.49 லட்சமாக இருந்த நிலையில், 2022-ல் அது 16 சதவீதம் உயர்ந்து 34.31 லட்சமாக உள்ளது.
மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் விற்பனை சென்ற ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. 2021-ல் மூன்று சக்கர வாகன விற்பனை 3.73 லட்சமாக இருந்த நிலையில் 2022-ல் அது 6.40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் டிராக்டர்கள் விற்பனை 7.69 லட்சத்திலிருந்து 7.94 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து எப்ஏடிஏ தலைவர் மணீஷ் ராஜ் சிங்கானியா கூறுகையில், “2020 மற்றும் 2021 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டின் விற்பனை குறைவானதாகும். பணவீக்கம், வாகன விலை உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன. எனினும், பயணிகள் வாகன விற்பனை சென்ற ஆண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது” என்றார்.