Last Updated : 05 Jan, 2023 02:52 PM

 

Published : 05 Jan 2023 02:52 PM
Last Updated : 05 Jan 2023 02:52 PM

50 வருட பழமையான வாகனங்களை பதிவு செய்யும் திட்டம்: நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசாவில் தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: 50 வருடங்கள் பழமையான வாகனங்களைப் பதிவு செய்யும் திட்டம், ஒடிசாவில் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக பதிவைத் தொடரும் ஒடிசாவில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் பழமையான வாகனங்களை அழிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. அதேசமயம், பழமையான வாகனங்களை பராமரித்து அவற்றை புதிதாகப் பதிவு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டம் அறிவித்துள்ளது. இதில், 50 வருட பழமையான வாகனங்களைப் பராமரித்து பதிவு செய்யும் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கி உள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்தத் திட்டம் ஒடிசாவில் அமலாகிறது.

இதன்படி, பழமையான வாகனங்களை சாலைகளில் ஓட்ட முடியாது. இவற்றை வணிக ரீதியாகவும், தம் சொந்த பயன்பாட்டிற்கும் கூட சாலைகளில் பயன்படுத்த அனுமதி கிடையாது. மாறாக, அவற்றைப் பராமரித்து பாரம்பரியச் சின்னமாக வைக்கவும், வாகன கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தவும் மட்டுமே அனுமதி உண்டு. இந்தத் திட்டத்தின்படி, 50 வருட பழமையான நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை புதிதாகப் பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் ஒடிசா மாநில போக்குவரத்து இணை ஆணையரான தீப்தி ரஞ்சன் பத்ரா கூறும்போது, ''இதன் விதிகளின்படி, வாகனங்களின் இயந்திரம் மற்றும் அதன் உருவங்களில் மாற்றம் செய்யக் கூடாது. பார்ம் 20 முறையில் பழமையான வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது வாகனம் வாங்கிய ரசீது, காப்பீடு மற்றும் அது பதிவு செய்யப்பட்ட ஆர்.சி ஆகியவை சமர்ப்பிக்கப்படுவது அவசியம். இதில், பழைய பதிவை ரத்து செய்து புதிதாக பதிவு செய்து அதற்கு, 'விஏ' எனும் வரிசையில் எண்கள் அளிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

இந்தப் பதிவிற்கான தொகையாக ரூ.20,000-ஐ அதன் உரிமையாளரிடம் வசூலிக்கப்பட உள்ளன. பழைய வாகனப் பதிவானது அடுத்த ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லும். இதன் பதிவை தொடர ரூ.5,000 கட்டணமாக செலுத்த வேண்டும். இவற்றை அதன் உரிமையாளர் மற்றவருக்கு விற்கவும் உரிமை உள்ளது. இதை அவர் மோட்டர் வாகனங்கள் சட்டம் 1988-இன் படி பதிவு செய்து மாற்றிக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x