

நடப்பு நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.8. சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) குறைத்துள்ளது.
பிஎப் வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதற்காக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.80 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, டெபாசிட் மீதான வட்டி குறைப்பு மற்றும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஆகிய காரணங்களால் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அறங்காவலர் குழு கூட்டத்தில் உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் வட்டி விகிதத்தை 8.80 சதவீத அளாவிலே தொடரவேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நிதி நிலவரத்தை பொறுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் பி.எப். வருமானம் ரூ.39,084 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்தது. பி.எப். டெபாசிட் மீது இதுவரை 8.80 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அதிக வட்டி வழங்கி வந்ததால் ரூ. 383 கோடி அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. பி.எப். மீதான வட்டியை நடப்பாண்டு துவக்கத்தில் 8.80 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு தொழிற்சங்கங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, 8.80 சதவீத வட்டியே வழங்கப்பட்டது