

புதுடெல்லி: கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு தளத்தில் வணிகப் போட்டிவிதிக்கு புறம்பாக செயல்படுவதாகக் கூறி கடந்த அக்டோபர் மாதம் இந்திய வணிகப் போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்துகூகுள் நிறுவனம் தேசிய சட்டநிறுவன தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அபராதத்துக்கு தடைவிதிக்கும்படி, மேல்முறையீட்டில் கூகுள் தெரிவித்திருந்தது.
இந்நிலையில். அம்மனுவை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அபராதத்துக்கு தற்போது உடனடியாக தடைவிதிக்க முடியாது என்றும் இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் தரப்பை விசாரித்தப் பிறகு அபராதத்துக்கு தடை விதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தற்சமயம் அபராதத் தொகையில் 10 சதவீதத்தை செலுத்தும்படி கூகுள் நிறுவனத்துக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வணிகப் போட்டி ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு தளத்தில் மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுக்காத வகையில் செயல்பட்டு வருகிறது என்ற புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மதம் இந்திய வணிகப் போட்டி ஆணையம் கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது.
இந்த அபராதம் குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஆண்ட்ராய்டு தளத்தால் இந்திய பயனாளர்கள், ஆப் டெவலப்பர்கள், உற்பத்தியாளர்கள் மிகுந்த பயன்பெற்றுள்ளனர். இந்திய டிஜிட்டல் பயனத்தில் ஆண்ட்ராய்டின் பங்கு முக்கியமானது. இந்தச் சூழலில் கூகுள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தால் பாதிக்கப்படுவது இந்திய வாடிக்கையாளர்கள்தான்” என்று தெரிவித்தது.
அபராதத்துக்கு தற்போது உடனடியாக தடைவிதிக்க முடியாது என்று மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது.