

மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி வலியுறுத்தல்
சாலையோர உணவு விற்பனை யாளர்கள் ரொக்கமற்ற வியாபாரத்துக்கு பழக வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் மூன்று நாட்களாக நடைபெற்ற தேசிய சாலையோர உணவகங்களின் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சரான (தனி பொறுப்பு) ராஜீவ் பிரதாப் ரூடி, சாலையோர உணவு வியாபாரிகளிடையே இதை வலியுறுத்தினார். ரொக்கமற்ற வர்த்தகத்துக்கு பயிற்சி பெறுவதும் அவசியம் என்று குறிப்பிட்டதுடன், ``ஸ்கிள் இந்தியா’’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற வியாபாரிகளுக்கு சான்றிதழையும் வழங்கினார்.
புதுடெல்லியின் சரோஜினி நகர் பகுதியில், ராதா தேவி என்கிற சாலையோர டீ கடை வியாபாரிக்கு நவீன வசதிகள் அடங்கிய வாகனத்தையும் அமைச்சர் வழங் கினார். வியாபாரிகள் தரமான சுகா தாரமான உணவை வழங்குவதன் அவசியம் மற்றும் பயன்கள் குறித்தும் வியாபாரிகளிடையே அமைச்சர் உரையாடினார்.
பணமதிப்பு நீக்கம் வியாபாரத்தை பாதிக்கிறது என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அனைத்து சாலையோர வியாபாரிகளும் மின்னணு முறைகளுக்கு மாறுவதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ரொக்கமற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். வர்த்தக பாதிப்பை சந்திக்காமலிருக்க அனைத்து வியாபாரிகளும் ரொக்கமற்ற வர்த்தகத்துக்கான பயிற்சியை பெறுவது அவசிய தேவையாக உள்ளது என்று அமைச்சர் ரூடி கூறினார்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சான்று நிறுவனமும், தேசிய சாலையோர வியாபாரிகள் கூட்டமைப்பும் இணைந்து டிசம்பர் 23 முதல் மூன்று நாட்கள் சாலை யோர உணவு திருவிழாவை புதுடெல்லியில் நடத்தியது. இதில் நாடு முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாஜ் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அடுத்த ஆண்டில் சர்வதேச சாலையோர உனவுத் திருவிழாவுக்கு மத்திய அமைச்சகம் ஏற்பாடும் செய்யும் என்றும் ரூடி குறிப்பிட்டார்.