

சனியன்று நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. அதிகார பகிர்வில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இது கவுன்சிலின் ஐந்தாவது கூட்டமாகும். இதனால் முக்கிய முடிவுகளை எடுக்க வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதி இந்த ஜிஎஸ்டி குழு மீண்டும் கூடுகிறது. அப்போது இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். நாடாளுமன்றத்தினஅ நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தொழில்களில் முன்னேற்றம் இல்லாததால் வரி வசூல் 50 சதவீதம் குறைவாக இருக்கிறது. இதே நிலைமை தொடரும் பட்சத்தில் அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்படலாம் என டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்தார். மற்ற மாநில நிதி அமைச்சர்களும் இதே கருத்தினை நிதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.
ஜிஎஸ்டியை அமல்படுத்த மத்திய அரசு திட்டம் வைத்துள்ளது என்று அறிவித்த ஜேட்லி என்ன திட்டம் என்பதைக் கூறவில்லை. கேரளா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வருமானம் இருக்கும் நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகின்றன. ஆனால் இதனை விட்டுக்கொடுக்க மத்திய அரசு விரும்பவில்லை.
ஏப்ரல் 1-ம் தேதி ஜிஎஸ்டி-யை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதிகபட்சம் செப்டம்பர் 16-ம் தேதி வரை காலம் கடத்த முடியும். அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை. அதன் பிறகு மறைமுக வரிகள் அனைத்தும் அர்த்தமற்றவையாகிவிடும் என ஜேட்லி கூறினார்.