

வங்கி, ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், ஸ்நாப்டீல் நிறுவனத்தில் ஆர்டர் செய்தால் பணம் வீடு தேடி வரும் என்று அந்நிறுவனமே அறிவித்துள்ளது. இதில் கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பணத்தைப் பெற ஸ்நாப்டீலுக்கு ஒரு ரூபாய் அளித்தால் போதும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் இவ்வசதி தற்போது குருகிராம் மற்றும் பெங்களூரு பயனர்களுக்கு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் மற்ற நகரங்களுக்கும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்நாப்டீல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேஷ்@ஹோம் (வீட்டிற்கே பணம்) என்னும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் பணம் வேண்டும் என்று பயனர்கள் ஆர்டர் செய்த மறுநாள் பணம் உங்கள் வீடு தேடி வரும்.
பயனாளிகள் எந்த வங்கி ஏடிஎம் அட்டை மூலமாகவும் இந்த வசதியை புக் செய்யலாம். ஒரு பயனர் ஒரு முறை ரூ.2000 வரை பெறமுடியும். இதில் கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உண்டு. இதன்மூலம் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கும்போது ஸ்வைப்பிங் மெஷின் மூலம் ஆன்லைனில் நீங்கள் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியும். ஸ்நாப்டீல் நிறுவனத்தினர் தேவையான உபகரணங்களை எடுத்து வந்துவிடுவர்.
இந்த சேவைக்காக பெயருக்கு 1 ரூபாய் வசூலிக்கிறோம். இதை நீங்கள் புக் செய்யும்போதே ஃப்ரீசார்ஜ் அல்லது கடன் அட்டை மூலமாகச் செலுத்த வேண்டும்.
இந்த சோதனை முயற்சி குருகிராம் மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. பயனர்களின் கருத்துகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதைப் பொருத்து இவ்வசதி விரைவில் மற்ற நகரங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
இதன்மூலம் பயனர்கள் வங்கி, ஏடிஎம் வாசலில் நீண்ட நேரம் காத்துக்கிடப்பது தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.