Published : 03 Jan 2023 04:25 AM
Last Updated : 03 Jan 2023 04:25 AM
நாகர்கோவில்: சபரிமலை மகர விளக்கு பூஜைக்காலம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் விவசாயிகளிடம் இருந்து ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தென்னை சார்ந்த விவசாயத்தால் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக தேங்காய் மகசூல் குறைந்த போதும், கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.20, ரூ.21 என்றஅளவிலேயே இருந்தது. இதனால்விவசாயிகள் தென்னை பராமரிப்புச் செலவுக்கு கூட வருவாய் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தேங்காய் விலை ஏற்றம் கண்டுள்ளது. மகரவிளக்கு பூஜைகாலத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிகமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். ஒரு பக்தர் அபிஷேகத்துக்கான நெய் தேங்காய் மற்றும் நேர்த்தி கடனுக்கு உடைப்பதற்காக 7 தேங்காய் வரை கொண்டு செல்வார்.
இதனால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பொங்கல் நெருங்குவதால் பொங்கல் சீர்வரிசை மற்றும் பண்டிகை கொண்டாட்டத்துக்கு அதிக அளவில்தேங்காய் தேவைப்படுகிறது. இதன் பொருட்டு மொத்த வியாபாரிகள் தேங்காய்களை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக தினமும் தேங்காய் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று ஒரு கிலோ தேங்காய் விவசாயிகளிடம் இருந்து ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. வியாபாரிகள் கிலோ ரூ.30-க்கு மேல் விற்கின்றனர். தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT