Published : 02 Jan 2023 04:35 AM
Last Updated : 02 Jan 2023 04:35 AM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதில், 2,200 ஹெக்டேரில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. ‘ஆரஞ்சு கோல்டு’ எனப்படும் இந்த கேரட் பொருளாதாரத்தை நம்பி சுமார் 50,000 பேர் உள்ளனர்.
இங்கு விளைவிக்கப்படும் கேரட், மேட்டுப் பாளையம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ கேரட் ரூ.80 முதல், ரூ.100 வரை விற்பனையானது.
தற்போது தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.12 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதேசமயம், வெளிச்சந்தையில் கேரட் கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இது குறித்து கேத்தி பகுதியை சேர்ந்த விவசாயி ஹரி கூறும்போது, ‘‘பருவம் மாறி பெய்யும் மழையால் கேரட் விதைப்பு, அறுவடை முறைகளும் மாறிவிட்டன. கேரட் விதைக்க வேண்டிய பருவத்தில் அறுவடை செய்யும் நிலையுள்ளது.
தவிர, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உதகை கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகளை காக்க கேரட்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT