

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், கணக்கில் காட்டப்படாத பணம் வங்கி நடைமுறைகளுக்குள் வருவதால் எதிர்காலத்தில் நேரடி, மறைமுக வரிகளை குறைக்க வாய்ப்புள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பெரிய அளவில் ரொக்கம் வைத்திருப்பவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையக் கொடுக்க வேண்டியிருக்கும், வரிவருவாய்த் துறையினர் இவர்களின் நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது என்றும் எச்சரித்துள்ளார் ஜேட்லி.
நிறைய பணம், தளர்வாக புழக்கத்தில் இருந்தது, இன்று வங்கி நடைமுறைகளுக்குள் வந்துள்ளன. மேலும், இதுவரை வரி செலுத்தாத இடங்களிலிருந்து வரி மீட்கப்படும்.
பெரும்பாலான அளவில் டிஜிட்டல் பண நடவடிக்கைக்கு மாறும்போது, இவர்கள் வரி வலையில் சிக்குவர். எனவே வரிவசூல் கடந்த காலத்தை விட அதிகமாகும். இதனால் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பை குறைக்க அரசுக்கு வாய்ப்பு கூடிவந்துள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்ட் உள்ளிட்ட மற்ற சீர்த்திருத்தங்கள் சமூகத்தில் ஊழலை வீழ்த்தும். இது பண நடவடிக்கையைக் குறைக்கும், வரி ஏய்ப்பை குறைக்கும்.
இதற்கு மீறியும் கையில் சட்ட விரோதமாக பெரிய அளவில் புதிய நோட்டுகளில் ரொக்கத்தை வைத்திருப்பவர்களால் பொருளாதாரம் பின்னடைவு காணும்.
எனவே அனைத்து முகமைகளும் இதனை கண்காணிக்க வேண்டும். இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது விசாரணை நடைபெறும், தாங்கள் செய்த காரியத்திற்கு இவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டி வரும்” என்று கடுமையாக எச்சரித்தார் அருண் ஜேட்லி.
காங்கிரஸ் மீது சாடல்:
காங்கிரஸ் எதிர்ப்பை கடுமையாக ஜேட்லி சாடும்போது, “ஊழலுக்கு எதிராகவோ, கறுப்புப் பணத்திற்கு எதிராகவோ காங்கிரஸ் ஆட்சி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.
ஊழல்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உச்சத்தில் சென்றன. அதன் ஊழல் சாதனையை வைத்துப் பார்க்கும் போது தேஜகூவின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை அவர்களை அசவுகரியமாக்கியுள்ளது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
2004-14 இடையே உயர் மதிப்பு நோட்டுகள் மொத்த ரொக்கப் புழக்கத்தில் 36%லிருந்து 80% ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது நாங்கள் குறைவான பணப்புழக்கம் என்ற பொருளாதார நடைமுறையை நோக்கி நகர்கிறோம்.
தற்காலிக பிரச்சினைகள், சிரமங்கள் நீங்கலாக, மீண்டும் புதிய நோட்டுகளை வேகமாகவே விநியோகித்து வருகிறோம், வரும் நாட்களிலும் அதிக பணம் விநியோகிக்கப்படும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்களவையில் விவாதிக்க நாங்கள் தயார். கோஷங்களை விடுத்து நன்மையைப் பார்க்கவும். வரிவருவாய் தற்போது அதிகரிக்கும்.
இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.