4-வது நாளாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 981 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார இறுதி நாளில் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 981 புள்ளிகள் (1.6 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,845 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 321 புள்ளிகள் (1.8 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,807 ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை 335 புள்ளிகள் சரிவுடனேயே தொடங்கிய வர்த்தகம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 649.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,176.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 166.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,960.40 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதமான சூழல்கள், பணவீக்கம் காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என்ற கவலைகள், அதிகரித்துவரும் கரோனா பாதிப்பும் குறித்த பயம் ஆகியவை இந்திய பங்குச்சந்தைகளை வெகுவாக பாதித்தன. இதனால் கடந்த அக்டோபர் 28-ம் தேதிக்கு பின்னர் முதல்முறையாக மும்பை பங்குச்சந்தையில் புள்ளிகள் 60,000-க்கும் கீழ் சென்றன. கடந்த மூன்று மாதத்தில் ஒரு நாளின் மிக கடுமையான வீழ்ச்சி இது. அனைத்து வகை பங்குகளும் இன்று சரிவிலேயே இருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 980.93 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,845.29 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 320.55 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,806.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை கோடாக் மகேந்திரா, எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, இன்ஃபேசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பவர் கிரீடு கார்ப்பரேஷன், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சிகண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in