

புதுடெல்லி: சர்வதேச நாடுகளின் சந்தைகளுக்கு கார் ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கும், சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச சந்தைகளுக்கு பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கும், காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே ஒப்பந்தமொன்று கையொப்பமாகியுள்ளது.
நடப்பாண்டு டிசம்பரிலிருந்து அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா ஏசியான், ஓசியானியா மற்றும் சார்க் மண்டலங்களின் நாடுகளுக்கு மாருதி சுஸுகியின் வாகனங்கள் காமராஜர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்.
இந்த துறைமுகத்தினை பயன்படுத்தி ஆண்டுக்கு 20,000 கார்கள் வரை ஏற்றுமதி செய்ய முடியும். காமராஜர் துறைமுகம் ஆட்டோமொபைல் வாகனங்களை கையாள்வதற்காக கார் மற்றும் பொதுச்சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் தளங்களை பிரத்யேகமாக மேம்படுத்தியுள்ளது.
மாருதி சுஸுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி கூறியது: காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியை தொடங்குவது உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களை நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்றடைவதை எளிதாக்கும். மேலும், வாகன ஏற்றுமதிக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மும்பை, முந்த்ரா மற்றும் பிபவவ் துறைமுகங்களில் நிறுவனத்தின் ஏற்றுமதியில் காணப்படும் நெரிசலையும் குறைக்க இந்த ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக அமையும். நிறுவனத்தின் ஏற்றுமதி நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது நம்பகமான, உயர்தர, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட கார்களை எங்களின் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாருதி சுஸுகி இதுவரை இல்லாத அளவில் 2.38 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது. காமராஜர் துறைமுகத்துடனான ஒப்பந்தத்துக்குப் பிறகும், மும்பை, முந்த்ரா, பிபவவ் துறைமுகத்திலிருந்து நிறுவனத்தின் வழக்கமான வாகன ஏற்றுமதி தொடரும் என்று மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.