

புதுடெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், ஜெர்மனியின் மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் இந்திய மொத்த விற்பனைப் பிரிவை ரூ.2,850 கோடிக்கு வாங்கி உள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ரோ ஏஜி குழுமத்தின் மெட்ரோ கேஷ் அன்ட் கேரி நிறுவனம் (மொத்த விற்பனைப் பிரிவு) 2003-ல் இந்தியாவில் கால் பதித்தது. இதன் சார்பில் இப்போது நாடு முழுவதும் 31 மொத்த விநியோக மையங்கள் இயங்கி வருகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள், மளிகை பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீட்டுக்கு தேவையான சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஓட்டல்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு இந்நிறுவனம் மொத்தமாக விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை ரூ.2,850 கோடிக்கு வாங்க ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் (ஆர்ஆர்விஎல்) ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இது தொடர்பான நடைமுறைகள் 2023 மார்ச்சில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மெட்ரோ கேஷ்அன்ட் கேரி நிறுவன கட்டமைப்பு முழுவதும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வசமாகிவிடும். அதன் வாடிக்கையாளர்களும் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவன வர்த்தகத்துக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.