

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வியாழக்கிழமை மீண்டும் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 241 புள்ளிகள் (0.39 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,826 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் (0.39 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,127 ஆக இருந்தது.
வியாழக்கிழமை காலை வர்த்தகம் 300 புள்ளிகள் உயர்வுடனேயே தொடங்கிய போதிலும் விரைவில் சரிவை நோக்கி சென்றது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 176.55 புள்ளிகள் உயர்வுடன் 61,243.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.05 புள்ளிகள் உயர்வுடன் 18,211.15 ஆக இருந்தது.
உலகளாவிய சாதகமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை காலை வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. ஆனாலும் சீனாவில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தாக்கம், கரோனா பரவல் குறித்த அச்சம் இந்திய பங்குச்சந்தைகளை வெகுவாக பாதித்தன. இதனால் காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 241.02 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,826.22 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,127.35 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை அட்ல்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, பவர் கிரீடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.