பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஜிஎஸ்டி சட்ட மாற்றங்கள்: ஏ.எம்.விக்கிரமராஜா விமர்சனம்

விக்கிரமராஜா | கோப்புப் படம்
விக்கிரமராஜா | கோப்புப் படம்
Updated on
1 min read

உதகை: ஜிஎஸ்டி சட்டத்தில் கொண்டுவரப்படும் தொடர் மாற்றங்கள் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாக, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா, உதகையை அடுத்த ஃபிங்கர்போஸ்டில் நேற்று நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்து, சங்க நிர்வாகிகளுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "சட்ட விதிகளை கடைப்பிடிப்பது குறித்து வணிகர்களிடம் தெளிவை ஏற்படுத்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி நகராட்சிகளுக்கு சொந்தமான மார்க்கெட்டிலுள்ள கடைகளின் வாடகை பிரச்சினையை தீர்க்க, தமிழக அரசு சார்பில் நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வணிகர்கள் அடங்கிய வாடகை சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, வாடகையை சீரமைத்து நிர்ணயிக்கும். அதுவரை, உயர்த்தப்பட்ட வாடகையை வியாபாரிகள் செலுத்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர்கள் நிர்பந்திக்கக்கூடாது. பிளாஸ்டிக் தடை சட்டம் பாரபட்சமாக உள்ளது. அரசு தடை செய்துள்ள 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்கக்கூடாது.

இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களின் பொருட்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. இந்த சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவர வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு சட்டங்கள், ஜிஎஸ்டி சட்டத்தில் தொடர் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவை பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. உள்நாட்டு வணிகத்தை சார்ந்து ஒரு கோடி பேர் உள்ளனர். இப்பிரச்சினை தொடந்தால் 10 ஆண்டுகளில் இவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடும். வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்" என்றார்.

மாவட்ட தலைவர் ஆர்.பரமேஸ்வரன், செயலாளர் எம்.ஏ.ரஹீம், பொருளாளர் கே.முகமது பாரூக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in