Published : 18 Dec 2022 05:43 AM
Last Updated : 18 Dec 2022 05:43 AM

பஞ்சுக்கு இறக்குமதி வரி ரத்து கிடையாது - மத்திய அமைச்சரின் அறிவிப்பால் ஜவுளி தொழில்துறையினர் அதிர்ச்சி

கோவை: பஞ்சு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படாது, இறக்குமதி வரியும் ரத்து செய்ய முடியாது என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 1.10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறும் இந்திய ஜவுளித் தொழிலில், சமீபகாலமாக பஞ்சு விலையில் நிலையற்றதன்மை காணப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி வரி 11 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என அறிவித்துள்ளார். இதனால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய பருத்தி கூட்டமைப்பின்(ஐசிஎப்) தலைவர் துளசிதரன் கூறியதாவது: இந்தியாவில் பருத்தி சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. முன்பு ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 450 கிலோவாக உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.1 லட்சத்தை கடந்து வரலாறு படைத்தது. மத்திய அரசு இறக்குமதி வரியை அக்டோபர் 31-ம் தேதி வரை ரத்து செய்த காரணத்தால் பஞ்சு விலை படிப்படியாக குறைந்தது.

தற்போது ஒரு கேண்டி ரூ.67 ஆயிரமாக உள்ளது. இருப்பினும் வெளிநாட்டு பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரமாக உள்ளது. 12 ஆயிரம் ரூபாய் விலை வித்தியாசம் உள்ளது. தவிர விலையில் நிலையற்றதன்மை காணப்படுகிறது.

பஞ்சு உற்பத்தி இந்தியாவில் குறைந்து வரும் சூழலில் இறக்குமதி வரி 11 சதவீதம் விதிக்கப்படுவது ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித் தொடரிலுள்ள அனைத்து தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

மத்திய அரசு அடிக்கடி கொள்கை முடிவில் மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. தேர்தலை கருத்தில் கொண்டு மட்டும் செயல்படாமல் ஜவுளித் தொழில் வளர்ச்சியையும் அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனையும் கருத்தில் கொண்டு பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் மற்றும் கழிவு பஞ்சு நூற்பாலைகளில் வாரத்தில் 3 நாட்கள் வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் வெளிநாட்டு பஞ்சுக்கும் இந்திய பஞ்சின் விலைக்கும் ஒரு கேண்டிக்கு ரூ.12 ஆயிரம் வரை வித்தியாசம் உள்ளது. இத்தகைய சூழலில் சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் தொழில் நிறுவனங்கள் எவ்வாறு போட்டியிட முடியும். அமைச்சர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் எதிர்வரும் நாட்களில் பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x